வெற்றி மாறன் விடுதலை படத்தில் கதாநாயகன் வாய்ப்பு வந்தபோது என்ன சொன்னேன்? சூரி பேட்டி

பட மூலாதாரம், Actor soori facebook
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா.
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பரோட்டா சூரியாக நகைச்சுவைப் பாத்திரத்தில் புகழ் பெற்ற சூரிக்கு ஹீரோ வாய்ப்பு வந்தபோது அவர் அதை எப்படி எதிர்கொண்டார்?
தமிழ் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படம் மூலமாக நகைச்சுவை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகர் சூரி.
தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை' படம் மூலமாக கதையின் நாயகனாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். நகைச்சுவை நாயகன், கதாநாயகன் என அடுத்தடுத்து 'உடன்பிறப்பே', 'அண்ணாத்த', 'விடுதலை', 'டான்' படங்கள் வரிசையாக இருக்க, அவரது சினிமா பயணம் குறித்தும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பிபிசி தமிழ் அவருடன் நடத்திய கலந்துரையாடலில் இருந்து,
'உடன்பிறப்பே' கதைக்குள் வந்தது எப்படி?
"இயக்குநர் சரவணனின் முதல் படமான 'கத்துக்குட்டி'யில் ஏற்கனவே நான் நடித்துள்ளேன். எது செய்தாலும், சமூக சிந்தனையோடு மக்களிடம் போய் சேர்க்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர். ''உடன்பிறப்பே' கதையில் ஜோதிகா, சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அடுத்து உங்களிடம்தான் கதை சொல்ல வருவேன்' என்று சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உறவுகள் சார்ந்து நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அதில் இந்த படமும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்".
கடைக்குட்டி சிங்கம், சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இதற்கு முன் நிறைய குடும்ப கதைகளில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். இந்த கதையிலும் அதே மாதிரியான கதாப்பாத்திரம்தானா?
"நீங்கள் சொன்னதுபோல, இதற்கு முன்பு நிறைய குடும்ப கதைகளில் நடித்து இருந்தாலும், இந்த கதையில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். ஜோதிகா, சசிகுமார் இருவருடைய குடும்பமும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பேசி கொள்ளாத குடும்பம். இரு குடும்பங்களும் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொதுவான ஆள் நான்".
முதல் முறை ஜோதிகாவுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
"அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவில் கதாநாயகியாக படங்கள் நடித்து கொண்டிருந்தார். ஜோதிகா 'ஸ்டார்' படத்தில் நடித்த போது நான் அதில் கலைப்பிரிவில் நான் வேலை பார்த்தேன்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 1
'உடன்பிறப்பே' படத்தின் சில உணர்ச்சிகரமான காட்சிகளில் எல்லாம் அவர் அழுததை பார்த்து நான் கிளிசரின் இல்லாமலே அழுதேன். நம்முடைய நடிப்பு எதிரில் இருப்பவர்களையும் நடிக்க வைக்க வேண்டும் என சொல்வார்கள். அதை ஜோதிகாவிடம் உணர்ந்தேன். சிறந்த நடிகை அவர்"
நகைச்சுவை நடிகராகவும் இன்னொரு பக்கம் கதாநாயகனாவும் நடித்து வருகிறீர்கள். சினிமாவில் உங்கள் இலக்கு என்ன?
"சினிமாவில் என்னுடைய இலக்கு நடித்து கொண்டே இருப்பது. மக்களை மகிழ்விக்க வேண்டும். அதற்கான பயணம் இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. நகைச்சுவை கலைஞனாக, நடிகனாக அதிக படங்கள் நடிக்க வேண்டும்".
இயக்குநர் வெற்றிமாறனுடைய 'விடுதலை'யில் நடிக்கிறீர்கள். வெற்றிமாறனுடன் இணைந்தது எப்படி?
"கதையின் நாயகனாக இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்தது நான் எதிர்ப்பார்க்காதது. அந்த ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்து கொண்டே இருக்கிறேன். நல்ல கதையின் நாயகனாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். இதை தாண்டி, கதாநாயகன் என்பதற்காக என்னுடைய எல்லை தாண்டி எந்த விதமான நெருடலாகவோ அல்லது கமர்ஷியல் தன்மையான படங்களிலோ நடிக்க விரும்பவில்லை. இயக்குநரின் நடிகனாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதை சார்ந்து கதைகளும் தற்போது கேட்டு கொண்டிருக்கிறேன்".
கதாநாயகனாக நடிக்க எதும் தயக்கம் இருந்ததா?
"முதல் முறையாக, கதையின் நாயகன் எனும்போது கூடுதல் படபடப்பு இருந்தது. வழக்கமாக, கதாநாயகர்களுடன் நகைச்சுவை நடிகராக நாம் நடிப்பதுதான். அப்போது நடிகராக நமக்கான சுமை குறைவு. இப்போது, கதாநாயகனாக நடிக்கும் போதுதான் அவர்கள் மீதான பொறுப்பு எந்த அளவுக்கு அதிகம் என்பதை உணர்கிறேன். அதேநேரத்தில் இயக்குநர் சொல்வதை சரியாக செய்ய வேண்டும், அவருக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்ற படபடப்பு இருந்தது.
'விடுதலை' கதையில் ஒரு அப்பாவியான கதாப்பாதிரம் என்னுடையது. அதற்கு நான் சரியாக இருப்பேன் என வெற்றிமாறனுக்கு தோன்றி இருக்கிறது. கேமராமேன் வேல்ராஜ் அவர் மூலமாக எனக்கு தகவல் வந்தது. அதற்கு முன்பு கூட, நான்கைந்து கதையின் நாயகனாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. சரியான நேரம் வரும்போது நடிக்க வேண்டும் என காத்திருந்தேன். அப்படி இருக்கும்போது இந்த வாய்ப்பு நான் எதிர்பாராதது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'முதலில் வெற்றிமாறன் படத்தில் சில காட்சிகள் காமெடியனாக வந்துபோக வாய்ப்பு கொடுங்கள்' என 'வடசென்னை' சமயத்தில் எல்லாம் அவரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது கதாநாயகன் வாய்ப்பு அவருடைய படத்தில் ஆச்சரியம்தான். 'விடுதலை' படத்திற்காக அவருடனான சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. வேறு படங்களில் அவர் பிஸியாக இருந்தார். அதன் பிறகுதான் 'அசுரன்' வந்தது. மிகப்பெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகும் கூட, அவர் என்னை அழைத்து 'படம் ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டார். சொன்ன வாக்கை மீறாமல் நிறைவேற்றக் கூடியவர் அவர்."
சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சசிகுமார் என உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே அதிக படங்கள் நடிப்பது போல உள்ளதே? தற்போது புதுமுகங்களுடன் வாய்ப்பு வந்தால் இணைந்து நடிப்பீர்களா?
"ஏன் ஒத்து கொள்ளாமல்? நடிப்பதை தவிர வேறு என்ன வேலை எனக்கு? தற்போது இயக்குநர் சிபி இயக்கத்தில் 'டான்' நடித்து கொண்டிருக்கிறேன். முகேனுடன் நடிக்கும் 'வேலன்' பட இயக்குநரும் புதுமுகம்தான். அதனால் புதுமுகம், பழகிய முகம் என்றில்லை. எனக்கு நல்ல வேலை இருந்தால் சரி".
முதல் முறையாக ரஜினிகாந்த் உடன் 'அண்ணாத்த'. ரஜினி- சூரி இணை படத்தில் எப்படி இருக்கும்?
"நடிகர் ரஜினியுடன் நிறைய காமெடியன்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். எங்களுடைய இணை திரையில் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். சினிமாவில் நுழையும் ஒவ்வொருவருக்கும் சினிமாவின் உச்சத்தை தொடமாட்டோமா என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதுபோல, சினிமாவில் நுழைந்த போது எனக்கும் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 2
என்னுடைய 10,12 வயதில் எல்லாம் தீவிரமான ரஜினி ரசிகன் நான். அவரது படம் போட்ட சட்டையை தீபாவளி சமயத்தில் அணிந்து, தியேட்டரில் படம் பார்க்கும் போது அவரை எதிர்க்கும் வில்லனை நோக்கி கத்துவது, பேப்பரை கிழித்து எறிவது என ஏராளமான ரகளை செய்திருக்கிறேன்.
அப்படி தீவிர ரசிகனாக இருந்து இப்பொழுது அவருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். படத்திலும் ரஜினி சார் என்னுடைய நடிப்பை மிகவும் ரசித்து சிரித்து பாராட்டி இருக்கிறார். படத்தில் சில எதிர்பாராத வசனங்கள் எல்லாம் எனக்கு கொடுத்து, 'இது சூரி சொன்னா நல்லா இருக்கும்ல' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெரிய விஷயம். 'சிறுத்த' சிவா இயக்கத்தில் 'வேதாளம்' படம் நடித்திருக்கிறேன். மறுபடியும் அவர் மீண்டும் அழைத்து ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சி".
சிக்ஸ்பேக் என்பது உடலை வருத்தும் கடினமான மாற்றம். அதை நீங்கள் செய்ய தூண்டியது எது? என்ன மாதிரியான சவால்களை அதில் எதிர்கொண்டீர்கள்?
"நான் சிக்ஸ்பேக் வைக்க வேண்டும் என்ற தூண்டுகோல் கொடுத்தது இயக்குநர் பொன்ராமும், சிவகார்த்திகேயனும்தான். 'சீமராஜா' படத்தின் ஒரு காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்தால் நன்றாக இருக்கும் என பொன்ராம் கேட்டார். 'காமெடிக்காக எதாவது மீசை, தாடி வைக்க வேண்டும் என்றால் பரவாயில்லை. நீங்கள் சொல்வது சிக்ஸ்பேக். 'நண்பன்' படத்தில் ஒரு பாட்டில் நகைச்சுவைக்காக சிக்ஸ்பேக் வைப்பார்கள், விவேக் சாரும் ஒரு படத்தில் நகைச்சுவை காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்திருப்பார். அதுபோலவா?' என்று கேட்டால் நிஜமாகவே வைக்க வேண்டும் என்றார் பொன்ராம்.

பட மூலாதாரம், 2D Entertainment
மிகவும் கடினமான செயல்முறை அது. ஜிம் மாஸ்டர் கற்று கொண்ட மொத்த வித்தையையும் என் மேல் இறக்கினார். நான்கு மாதங்களில் சிக்ஸ்பேக் வைத்தேன். ஆனால், படத்தில் என்னுடைய சிக்ஸ்பேக் காட்சி வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் தள்ளி போனது. அதனால், கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் சிக்ஸ்பேக் பயிற்சியிலே இருந்தேன். ஆனால், இந்த நேரத்தில் இயக்குநர் பொன்ராமுக்கு என்னுடைய நன்றி. அவர் இல்லை என்றால் இந்த உடம்பு எனக்கு கிடைத்திருக்காது. வெற்றிமாறன் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது கூட இதனால்தான். ஏனெனில், அதில் எனக்கு போலீஸ் கதாப்பாத்திரம்தான்".
காமெடியனாக நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்து இருக்கிறீர்கள். பரோட்டா சூரி தவிர மனதில் பதியக்கூடிய கதாப்பாத்திரமாக தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நெருக்கமானது எது?
"எல்லா கதாபாத்திரங்களுமே எனக்கு பிடித்தவைதான். 'வெண்ணிலா கபடிக்குழு'வில் பரோட்டா சூரி எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான்".
பிற செய்திகள்:
- ஒருபாலுறவு முதல் முஸ்லிம் வரை: விதிகளை உடைத்த 5 சூப்பர் ஹீரோக்கள்
- தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
- இந்து - முஸ்லிம் பிரச்னை, விவசாயிகள் மரணம்: உ.பி தேர்தலில் எதிரொலிப்பது எது?
- கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட நாய்கள்: எஜமானர் கண்ணீர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



























