கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிபிசி வங்க சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அக்டோபர் 17, சனிக்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில், வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற 'சோர்பாகன்' துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்ற இருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பூஜையில் பங்கேற்பதற்காக கொல்கத்தாவுக்கு வெளியே உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் உள்ளிட்ட பலரும் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.
காணொளி சற்றுத் தெளிவின்றிக் காணப்பட்டாலும், பலர் தரையில் விழுந்து கிடப்பதும், அலறல் சத்தங்கள் கேட்பதும் அதில் பதிவாகியுள்ளன.
காவல்துறையினர் அந்த துர்கா பூஜைப் பந்தலை மூடி சீல் வைத்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, பூஜைக் குழுவைச் சேர்ந்த யாரும் அந்தப் பந்தலில் காணப்படவில்லை.
மேற்கு வங்க சுகாதாரத்துறை அமைச்சர் சரதாவத் முகர்ஜி, "மழை காரணமாக நெருக்கடியான சூழல் உருவானது. திடீரென மழை பெய்யத் தொடங்கியபோது, உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில், வெளியே இருந்தவர்கள் உள்ளே வர விரும்பினர்" என்றார்.

பட மூலாதாரம், Dibyangshu SARKAR / AFP via Getty Images
சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, பின்னர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சரதாவத் முகர்ஜியும் மருத்துவமனைக்கு வந்தார்.
செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்ட தகவலின்படி, சோர்பாகன் துர்கா பூஜை ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஏழு பேரை இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகக் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த ஏழு பேரையும் காவல்துறையினர் விசாரணைக்காக காவலில் வைத்திருந்தனர். அப்போது காவலில் வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
விபத்து எப்படி நடந்தது?

பட மூலாதாரம், ANI
நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, மாலையில் சோர்பாகன் துர்கா பூஜைப் பந்தலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு சுமார் 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதும், பலர் மழையிலிருந்து தப்பிக்கக் குறுகிய சந்துகளுக்குள் செல்ல முயன்றனர்.
இதற்கிடையில், பந்தலுக்குள் இருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. மழையில் வெளியே சிக்கியிருந்தவர்களும் உள்ளே செல்ல முண்டியடித்தனர். இதனால், தற்காலிகப் படிக்கட்டுகளில் கூட்டத்தின் அழுத்தம் அதிகரித்து, ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர்.
பந்தலில் இருந்த துர்கா சிலை இரும்புக் கட்டமைப்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டமைப்பின் ஏதேனும் பகுதி இடிந்து விழுந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை கிடைத்த நேரில் பார்த்தவர்களின் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் முழுவதும் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள் நடந்திருக்கலாம்.
நேரில் பார்த்த ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறுகையில், "எனது உறவினர்கள் அங்கு சென்றிருந்தனர். எனது தாய்மாமா கூறிய தகவலின்படி, அவர்கள் வெளியேற முயன்ற சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பந்தலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்தத் தன்னார்வலரும் முயற்சி எடுக்கவில்லை" என்றார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்தது. பலர் வரிசையில் நின்றிருந்தனர். அங்கு முழுவதும் இருட்டாக இருந்தது; ஒரு விளக்குகூட எரியவில்லை. எனது மகள் மற்றும் பேத்தி என்னுடன் இருந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானும் கீழே விழுந்துவிட்டேன். விபத்து நடந்த பிறகு அரை மணி நேரத்துக்கு அங்கு காவல்துறையினரோ, உதவி பணியாளர்களோ யாரும் இல்லை" என்றார்.
சம்பவ இடத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், "இன்ஸ்டாகிராம் ரீலைப் பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்தோம். இந்தப் பந்தல் மிகவும் அழகாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிந்துகொண்டோம். அந்த ரீலில் இங்கு ஏராளமான கூட்டம் இருப்பதையும் பார்த்தோம். இங்கு வந்த பிறகுதான் விபத்து நடந்ததை அறிந்துகொண்டோம்" என்றார்.
பந்தலைத் திறந்து வைத்த சுவேந்து அதிகாரி

பட மூலாதாரம், AFP via Getty Images
சோர்பாகன் துர்கா பூஜை இந்த ஆண்டு தனது 91-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பந்தலுக்குச் செல்ல குறுகிய சந்தின் வழியாகவே செல்ல வேண்டும். மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தப் பந்தலைத் திறந்து வைத்தார்.
பந்தலைச் சுற்றியுள்ள தெருக்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தச் சில தன்னார்வலர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு பாதை விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் வெளியேறுவதற்கான இரண்டாவது வழி, சில இடங்களில் சுமார் 10 அடி அகலத்திலும், வேறு சில இடங்களில் 30 அடி அகலத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பந்தலில் இருந்த ஒருவர் கூறுகையில், "அருகிலுள்ள தெரு மூடப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியவில்லை. காவல்துறையினரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். உள்ளே சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற உள்ளூர் மக்கள் விரைந்து வந்தனர்" என்றார்.
மற்றொரு நபர் கூறுகையில், பந்தலைப் பார்க்க வந்த தனது நண்பர்கள் மூவர் தரையில் விழுந்ததாகத் தெரிவித்தார். அவர்களைத் தூக்கிவிட தான் முயன்றபோதும் முடியவில்லை எனவும் பின்னர் வேறு சிலர் முன்வந்து அவர்களை வெளியே இழுத்துக் காப்பாற்ற முயன்றனர் எனவும் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்த உதவி காவல் ஆணையரிடமிருந்து கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்றும், சிலர் விசில் அடித்ததும் இந்தச் சம்பவம் தொடங்கக் காரணமாக இருந்ததாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி சனிக்கிழமை மாலை கொல்கத்தா வந்தார். சோர்பாகன் பொது துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது குறித்த மிகவும் வருத்தமளிக்கும் செய்தி தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































