எஸ்.ஐ.ஆர் தொடர்பான எதிர்க் கட்சிகளின் போராட்டம் பற்றி பாகிஸ்தான், பிரிட்டனில் பேசப்படுவது என்ன?

பட மூலாதாரம், ANI
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், எதிர்க் கட்சிகளின் போராட்டம் ஆகியவை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
பிரிட்டனின் தி கார்டியன், கத்தாரின் அல் ஜசீரா, ஜெர்மனியின் டாய்ச்சே வெல்லே, பாகிஸ்தானின் டான் மற்றும் ஜியோ நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த முழு விவகாரத்தையும் வெவ்வேறு கோணங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளன.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்றும், எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமையும் புதன்கிழமையும் டெல்லி சாலைகளில் போராட்டம் நடத்தினர்.
இதுதவிர, காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகிறது. பிரதமர் மோதி தலைமையிலான அரசும் ஞானேஷ் குமாரும் கூட்டாகச் செயல்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
பிரிட்டனின் 'தி கார்டியன்' கூறியது என்ன?
பிரிட்டனின் தி கார்டியன், இதை வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான சர்ச்சையாகப் பார்த்துள்ளது.
அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தியில், "கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான சர்ச்சைக்குரிய நடவடிக்கை மற்றும் பரவலான போராட்டங்களுக்கு மத்தியில், இந்திய உச்ச நீதிமன்றம் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியுள்ளது. சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துள்ளன. எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான 'காக்ரோச்' இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்" என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
"இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் பாரம்பரியமாக மோதியின் ஆளும் பாஜக-வின் வாக்காளர்களாக இருப்பதில்லை" என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது.
எனினும், எஸ்ஐஆர் என்பது முகவரியை மாற்றி வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் நடைமுறை என்று தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்திற்கும் தி கார்டியன் இடமளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அல் ஜசீரா கூறியது என்ன?
கத்தாரின் அல் ஜசீரா, அக்டோபர் 6ஆம் தேதி ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை செய்தியாக வெளியிட்டது. அதன் செய்திப்படி, போராட்டக்காரர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி வருகின்றனர். மேலும், எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர் பதிவில் முறைகேடுகள் நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேவேளையில், போலி, உயிரிழந்த அல்லது தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதே எஸ்ஐஆர்-இன் நோக்கம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதையும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
"இந்த நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதும் பெறுவதற்குக் கடினமானதுமான ஆவணங்கள் கேட்கப்படுவதாகவும், இதனால் லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். சில பகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 30% வரை குறையக் கூடுமென தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக" என்று அந்த ஊடகம் எழுதியுள்ளது.
இதற்கு முன்பாக, அக்டோபர் 2ஆம் தேதி அல் ஜசீரா, 'இந்தியாவின் காக்ரோச் இயக்கத்தால் மோதியின் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியில் இருந்து அகற்ற முடியுமா?' என்ற தலைப்பில் விரிவான பகுப்பாய்வை வெளியிட்டிருந்தது. அதில், அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி, முந்தைய போராட்டங்களில் இருந்து அரசு உத்தி சார்ந்த பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த முறை போராட்டக்காரர்கள் பெரும் கூட்டத்தைத் திரட்டுவதற்கு முன்பே அவர்களைத் தடுக்க அரசு முயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், சிஜேபி-யின் இளம் போராட்டக்காரர்கள் முன்பைவிட தற்போது அதிக அனுபவம் பெற்றுள்ளதாகவும் அந்தப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
இங்கு ஒரு முக்கியமான விஷயம் உள்ளது: அல் ஜசீராவின் பகுப்பாய்வு, அரசுக்கு ஏற்பட்டுள்ள சவாலை ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க் கட்சிகளுடன் மட்டும் தொடர்புபடுத்தவில்லை. இளைஞர் இயக்கமும் எதிர்க் கட்சிகளும் ஒரே பிரச்னையை முன்வைத்து வீதிகளில் இறங்கியிருப்பது முக்கியக் காரணியாகக் கருதப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன?
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டான், அக்டோபர் 7ஆம் தேதி ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைப் பற்றி செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியில், மோதியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் உருவாகியுள்ள புதிய அரசியல் சவாலாக இந்தப் போராட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், பாஜகவின் பதில் ஆகிய மூன்றும் அதில் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், அக்டோபர் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியதற்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டது. அதன் செய்தியில் எதிர்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் போராட்டம், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை, எஸ்ஐஆர் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதையும் அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
'பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாதக் கட்சியான பாஜகவின் உத்தரவுப்படி ஞானேஷ் குமார் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது' என்பது ஜியோ நியூஸின் கூற்று.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி ஒன்றையும் அது குறிப்பிட்டுள்ளது. அதில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 தடவை முறையாக ஆட்சேபனை பதிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதி முன்னுள்ள சவால்
சர்வதேச உறவுகள், உலக அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரபல அமெரிக்க செய்தி இதழும் டிஜிட்டல் வெளியீடுமான ஃபாரின் பாலிசியில், அக்டோபர் 1ஆம் தேதி ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சுமித் கங்குலியின் பகுப்பாய்வு வெளியானது. அதன் தலைப்பு: "தேர்தல் ஆணைய சர்ச்சையால் போராட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மோதி."
தேர்தல் ஆணையம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள், எதிர்க் கட்சிகளுக்கும் சிஜேபி போன்ற இளைஞர் இயக்கத்துக்கும் ஒரு பொதுவான பிரச்னையாக உருவாகி வருவதால், இந்த விவகாரம் மோதி அரசுக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும் என்று கங்குலி வாதிடுகிறார்.
இந்த விவகாரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் முக்கிய அடிப்படையாக இருப்பதாக அவர் கருதுகிறார்.
ஆனால், அவரது பகுப்பாய்வு ராகுல் காந்திக்கும் முழுமையாகச் சாதகமானதாக இல்லை. கங்குலி, இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான திறன் காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ளதா என்பது குறித்துக் கேள்விகள் இருப்பதாக எழுதுகிறார். அவரது கருத்துப்படி, காங்கிரஸ், சிஜேபி மற்றும் பிராந்தியக் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே, 2014க்கு பிறகு பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள மிகத் தீவிரமான சவால்களில் ஒன்றாக இது உருவாகக் கூடும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































