நான்கு கிராம்மி விருதுகளை அள்ளினார் சாம் ஸ்மித்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் இசைத்துறையினருக்கு வழங்கப்படும் பிரபல கிராம்மி விருதுகளில் இவ்வருடம் மிக அதிகமான விருதுகளை பிரிட்டிஷ் பாடகரும் பாடலாசிரியருமான சாம் ஸ்மித் பெற்றுள்ளார்.

சாம் ஸ்மித்
படக்குறிப்பு, இசைத்துறையில் கால் பதித்த முதல் ஆண்டிலேயே நான்கு கிராம்மிகளை வென்றுள்ளார் சாம் ஸ்மித்

சிறந்த புதுப் பாடகர் விருது, 'ஸ்டே வித் மி' என்ற பாடலுக்காக தலைசிறந்த பாடலுக்கான விருது உட்பட நான்கு விருதுகளை அவர் வாங்கியுள்ளார்.

12 மாதங்களுக்கு முன்னால், இப்படி ஒரு கலைஞர் இருப்பதே யாருக்கும் தெரியாது என்ற நிலையிருக்க, ஓரிரவு உறவு பற்றிய தனது பாடலால் ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் அவர் பெற்றார்.

இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் விருது 'மார்னிங் ஃபேஸ்' என்ற ஆல்பத்துக்காக அமெரிக்கக் கலைஞர் 'பெக்'கிற்கு வழங்கப்பட்டது.

விருது விழா நடைபெற்ற கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலேயே பிறந்தவர் பெக்.

சமூகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க இசைக் கலைஞர்கள் தமது பிரபல்யத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டும் என இந்த விழாவில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.

பாடகி கேட்டி பெர்ரியும் அதே கருத்தை தெரிவித்தார்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சி அல்லது அதற்கான முயற்சியியால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என அதிபர் ஒபாமா தெரிவித்தார்.