கார்ட்டஜீனா நகருக்கு வருகிறது மார்க்குவெஸின் அஸ்தி
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸின் அஸ்தி டிசம்பர் மாதத்திலிருந்து கொலம்பியாவின் கார்ட்டஜீனா நகரில் நிரந்தரமாக வைக்கப்படவிருக்கிறது.

பட மூலாதாரம், n
கார்ட்டஜீனா நகரில் உள்ள வரலாற்று மையத்தில் இந்த அஸ்தி வைக்கப்படும்.
லவ் இன் த டைம் ஆஃப் காலரா உட்பட தனது படைப்புகள் பலவும் இந்த நகரில் நிகழ்வதாகத்தான் மார்க்குவெஸ் படைத்திருந்தார்.
தனது குடும்பத்தினருடன் மெக்ஸிகோவில் பல ஆண்டுகளாக வசித்துவந்த மார்க்குவெஸ் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கேயே மரணமடைந்தார்.
அவரது அஸ்தியை கார்ட்டஜீனா நகருக்குக் கொண்டுவந்து வைக்க வேண்டுமென அவரது மனைவி மெர்சிடிஸ் பார்ச்சாவும் அவரது இரண்டு மகன்களும் முடிவுசெய்தனர். இதை கொலம்பியாவில் பலரும் வரவேற்றுள்ளனர்.
1948ஆம் ஆண்டில் கார்ட்டஜீனா நகருக்கு மார்க்குவெஸ் முதன்முதலாக வந்தார். உள்ளூர் நாளிதழான எல் யுனிவர்சலில் பத்திரிகையாளராக பணியில் சேர்ந்தார். கார்ட்டஜீனாவில் ஒரு விடுமுறை இல்லத்தை வைத்திருந்த மார்க்குவெஸ், தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை அங்கு அடிக்கடி வருவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்.
லத்தீன் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்கவென ஒரு அமைப்பையும் மார்க்குவெஸ் அங்கு உருவாக்கியிருந்தார்.
"மார்க்குவஸ் ஒரே ஒரு வீட்டைத்தான் கட்டினார். அந்த வீடு கார்ட்டஜீனவில்தான் இருக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அங்கு வசித்தனர். இங்குதான் அவரது பெற்றோர்புதைக்கப்பட்டிருக்கின்றனர்" என்கிறார் அந்த அமைப்பின் இயக்குனரான ஜெய்மி அபெல்லோ.





























