சிரியாவில் அரபு லீக்கின் கண்காணிப்பு பணி இடைநிறுத்தம்

அரச எதிர்ப்பு கிளர்ச்சிப் படையைச் சேர்ந்தவர் ஒருவர்
படக்குறிப்பு, சிரியாவில் அரச படையினருக்கும் அரச எதிர்ப்பு கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையில் வன்முறை நீடித்துக்கொண்டே வருகிறது.
பிரசுரிக்கப்பட்டது

சிரியாவில் அரபு லீக் அமைப்பினர் மேற்கொண்டுவந்த கண்காணிப்பு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி அரபு சேவையிடம் பேசிய அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் எல் அரபி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் மோசமடைந்துவரும் சூழ்நிலையை சரிசெய்வதற்காக அந்நாட்டுக்கு வந்த அரபு லீக் கண்காணிப்பாளர்கள் அப்பணியைச் செய்யத் தவறியுள்ளதாக அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கண்காணிப்பாளர்களின் பயணம் ஒரு மாத காலத்தை எட்டியவுடன் அவர்களது பணிக்காலத்தை அரபு லீக் நீட்டித்திருந்தது, ஆனால் வளைகுடாப் பகுதி அரபு நாடுகள் அந்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த தமது நாட்டவரை விலக்கிக்கொண்டிருந்தனர்.