மூன்றாவது மனைவியிடம் விவாகரத்து கோருகிறார் ரூபர்ட் மர்டாக்

சர்வதேச ஊடகத்துறை பெருமுதலாளி ரூபர்ட் மர்டாக், தனது மூன்றாவது மனைவி வெண்டி டெங்கை விவாகரத்து செய்ய மனுச்செய்துள்ளர்.
ஆறு மாதங்களுக்கு முன்பே, இவர்களின் மணவாழ்க்கை மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு கசந்துவிட்டதாக மர்டாக் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
தன்னை விட 38 வயது இளையவரான டெங்கை 1999ல் மர்டாக் மணந்தார்.
இத்தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ், ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஸ்கை டிவி, இந்தியாவின் ஸ்டார் டிவி போன்றவற்றை நடத்தும் நியூஸ் கார்ப்பொரேஷன் என்ற மர்டாக்கின் தொழில் சாம்ராஜியத்தில் வெண்டி டெங்குக்கு உத்தியோகபூர்வ பங்கு எதுவும் இல்லை.
ஆனால் சீனாவில் நியூஸ் கார்ப்பொரேஷன் விரிவடைந்ததில் வெண்டிக்கும் பங்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
நியூஸ் கார்ப்பொரேஷன் நிறுவனம் கூடிய விரையில் இரண்டாக பிளவுபடுத்தப்படும் என்றும் தெரிகிறது.
போன முறை மர்டாக் விவாகரத்து செய்தபோது நூற்று எழுபது கோடி டாலர்களை அவர் ஜீவனாம்சமாக கொடுக்கவேண்டிவந்தது.
எந்த ஒரு விவாகரத்திலும் இல்லாத மிகப் பெரிய ஜீவனாம்சத் தொகையாக அது இருந்தது.
ஆனால் இந்த முறை விவாகரத்து சொத்துப் பங்கீடு சம்பந்தமாக மர்டாக்குக்கும் வெண்டிக்கும் இடையே திருமணத்துக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
மர்டாக் தொள்ளாயிரம் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களின் உரிமையாளர் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிடுகிறது.
மர்டாக் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது அவர் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சாப்பாட்டை வீசியெறிய, குறுக்கே பாய்ந்து காப்பாற்றியமைக்காக பலராலும் அறியப்பட்டவர் வெண்டி டெங் ஆவார்.
































