பல்கலைக்கழகங்களில் பாலினப் பிரிப்பா? -கேமரன் எதிர்ப்பு

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமியப் பேச்சாளர்கள் விருந்தினர்களாக வந்து உரை நிகழ்த்தும் போது, அதில் பங்கெடுக்கும் மாணவ மாணவிகளை பாலின ரீதியில் பிரித்து உட்காரவைக்கலாம் என்ற பிரிட்டிஷ் பல்கலைக் கழகங்களின் யோசனைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பான, யுனிவர்சிடீஸ் யு.கே (UUK) என்ற அமைப்பு இந்த ஆலோசனையை வழங்கியிருந்தது பிரிட்டிஷ் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆலோசனை குறித்து பிரதமரின் எதிர்ப்பு பலமாக இருப்பதாகக் கூறிய பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர், இந்த பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் ஆலோசனை அவசரமாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"இவை பல்கலைக்கழகங்கள். வழிபாட்டிடங்கள் அல்ல,பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரம் குறித்த ஒரு முக்கியமான பாரம்பர்யம் இருந்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே, இந்த யோசனைக்கு, பிரிட்டிஷ் கல்வி அமைச்சர் மைக்கேல் கோவ், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் சுக்கா உமுன்னா, முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இது மதத் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்த முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆலோசனை என்று இதை விமர்சிப்போர் வாதிடுகிறார்கள்.
இந்த சர்ச்சை எழுந்த நிலையில், இந்த ஆலோசனையை மறு பரிசீலனை செய்யப்போவதாக பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.இதை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் பரிசீலனைக்கும் அனுப்பியிருப்பதாக அது கூறுகிறது.




























