அண்டார்க்டிக்கா பனிக்கட்டிகளில் சிக்கிய கப்பல்கள் வெளியே வந்தன

பனிக்கட்டிகளில் சிக்கிய சீனக் கப்பல்
படக்குறிப்பு, பனிக்கட்டிகளில் சிக்கிய சீனக் கப்பல்
பிரசுரிக்கப்பட்டது

அண்டார்க்டிக்கா பனிக்கட்டிகளில் சிக்கி பயணிக்க முடியாமல் நின்ற ரஷ்ய விஞ்ஞான ஆய்வுக் கப்பலும், அதில் சிக்கிய குழுவினரை மீட்டு, பின்னர் பனிக்கட்டிகளில் சிக்கிய சீனக் கப்பலும் இப்போது அப்பனிக்கட்டிகளிலிருந்து வெளியேறி வந்துள்ளன.

இப்பகுதியில் காற்று திசை மாறி வீசியதை அடுத்து, பனிக்கட்டிகளில் ஒரு பிளவு ஏற்பட்டதாக ரஷ்ய ஆய்வுக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார்.

ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கோல்ஸ்கி, டிசம்பர் 25ம் தேதி, இப்பகுதியில் பனிக்கட்டிகளிடையே சிக்கிக்கொண்டது.

அந்தக் கப்பலில் இப்போது 22 ரஷ்யக் குழுவினர் இருக்கின்றனர். இக்கப்பலில் பயணித்த 54 விஞ்ஞானிகள் குழுவினர் அப்பகுதிக்கு வந்த சீன ஐஸ் உடைக்கும் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

ஆனால் இந்த சீனக் கப்பலும் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பனிக்கட்டிகளில் சிக்கி பயணிக்க முடியாமல் நின்றது.