யுக்ரெய்னில் அரசுக்கும் எதிரணிக்கும் இடையே உடன்பாடு: அதிபர்

பட மூலாதாரம், AFP
யுக்ரெய்னில் நேற்று வியாழன் இரவு நடந்த பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்திற்கும் எதிரணித் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிபர் விக்டர் யானுகோவிச் கூறுகிறார்.
ஆனால், இந்த உடன்பாடு இன்னும் உறுதியாகவில்லை என்றும் கலந்தாலோசனைகள் தொடர்வதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த உடன்பாடு பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கும் உடன்படுமாறு அதிபர் யானுகோவிச் மீது அழுத்தம் இருந்துவந்ததாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இதற்கிடையே, பாதுகாப்புப் படையினரை தங்களின் முகாம்களுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட வேண்டுமென்று நேற்று பின்னிரவில் நடந்த அவசர அமர்வின்போது யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
எனினும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் கியேவில் உள்ள சுதந்திர சதுக்கத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரும் எண்ணிக்கையிலான பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பக்கம் சேர்ந்துகொண்டுள்ளனர்.
சிறு சிறு மோதல்கள் ஆங்காங்கே நடந்தாலும் இப்போது நிலைமை பொதுவாக அமைதியாகவே இருந்துவருவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நேற்று வியாழக்கிழமை நடந்த வன்முறை மோதல்களில் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
































