இராக்கில் சுனி கிளர்ச்சி கூடுதலான நிலப்பரப்புகளை பிடித்துவருகிறது

ஐசிஸ் ஆயுததாரிகள்
படக்குறிப்பு, ஐசிஸ் ஆயுததாரிகள்
பிரசுரிக்கப்பட்டது

இராக்கில் ஐசிஸ் என்ற இஸ்லாமியவாத கடும்போக்காளர்களால் வழிநடத்தப்படும் சுனி எழுச்சி, நாட்டின் கிழக்கில் சுனி மக்கள் அதிகமாக வாழும் டியாலா மாகாணத்தில் எதிர்ப்பைச் சந்திக்காமலேயே புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றி வருகிறது.

அடுத்ததாக பாக்தாத்திற்கும் ஷியாக்கள் பெரும்பான்மையாக வாழும் மையப் பகுதிகளுக்கும் வருவோம் என கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

ஐசிஸ் கிளர்ச்சிக்கார்கள் முற்றுகையிட்டதையடுத்து வடக்கிலுள்ள மோசுல் நகரிலிருந்து வெளியேறிருந்த நுற்றுக்கணக்கானவர்கள், பாதுகாப்புக்கு பங்கம் வராது என நம்பிக்கை எழுந்திருப்பதால் மோசுலுக்குள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் மோசுலிலிருந்து வட இராக்கில் பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் கொண்ட குர்த் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் வெளியேருவதென்பது தொடர்ந்து நடந்துவரவே செய்கிறது.

ஆயுததாரிகளிடம் இருந்து தப்பித்து தமது பகுதிகளுக்குள் வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சர்வதேச உதவிகள் தேவை என குர்திஷ் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இராக்கிய அரச படைகளில் பெரும்பான்மையானவை ஒருங்கிணைப்பில்லாமல் திணறுவதாக தெரிவிக்கப்படுக்கின்ற ஒரு சூழலில், கிர்குக் பிராந்தியத்தில் உள்ள இராணுவ தளங்களை குர்திஷ் துருப்புகள் ஆக்கிரமித்துள்ளன.