தொற்றுநோய் கவலைகளுக்கு மத்தியில் ஹஜ் யாத்திரை துவங்கியது

பட மூலாதாரம், Reuters
சுமார் 20 லட்சம் முஸ்லீம்கள் பங்கேற்கும் சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் யாத்திரை இன்று துவங்கியுள்ளது.
அதே நேரம், வேகமாகப் பரவி வரும் தொற்றுநோய்களான இபோலா மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள், யாத்ரிகர்களை பாதிக்கக்கூடும் என்கிற கவலைகள் தோன்றியுள்ளன.
உலக அளவில் இதுவரை இபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டிவிட்டது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஹஜ் பயணத்துக்கான விசாவோ அல்லது வேலை செய்வதற்கான விசாவோ தற்போது சவுதி அரசால் வழங்கப்படுவதில்லை.
அதேசமயம் மெர்ஸ் என்கிற நுரையீரல் தொற்றுநோய் மத்திய கிழக்கில் வேகமாக பரவி வருகிறது. லெபனான், ஈரான் மற்றும் ஜோர்டானில் இந்த வைரஸ் நோயால் பலர் இறந்துள்ளனர்.
இருந்தும் வழமைபோல ஹஜ் யாத்திரை துவங்கியுள்ளது. ஆடம்பரங்கள் ஏதுமில்லாத, வெள்ளை உடையணிந்துள்ள யாத்ரிகர்கள், மெக்காவில் இருந்து மீனா பள்ளத்தாக்கு நோக்கி அலை அலையாக நகர்ந்து செல்கின்றனர்.
இவர்கள் வசதிக்காக பாலைவனப் பகுதிகளில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




























