நேபாள பனிச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு

பிரசுரிக்கப்பட்டது

நேபாள பனிப்புயலிலும் பனிச்சரிவிலும் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணி தொடர்கிறது
படக்குறிப்பு, மீட்புப் பணி தொடர்கிறது

காணாமல் போன மலையேற்ற வீரர்களைத் தேடி, நான்காவது நாளாக தேடுதல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பனிக்கு அடியில் மேலும் பலரது உடல்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 282 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் நிகழ்ந்த மிக மோசமான ட்ரெக்கிங் விபத்தாக இது கருதப்படுகிறது.

தங்களுடைய வழிகாட்டிகள் தங்களைக் கைவிட்டுவிட்டதாக சில பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேபாளம், இஸ்ரேல், கனடா, இந்தியா, ஸ்லவோக்கியா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிழைத்தவர்களில் பலரது உடலின் சில பாகங்கள் பனியால் உறைந்துபோயிருப்பதால், அவற்றை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அன்னபூர்னா ட்ரெய்ல் என்ற பகுதியில்தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்தன.

சனிக்கிழமையன்றும் இந்தப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

ஒவ்வொரு வருடமும் நேபாளத்தில் இருக்கும் இமயமலைச் சரிவுகளில் மலையேறும் பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே குவிகின்றனர். இதன் மூலம் நேபாளத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.

நேபாளம் மிக ஏழை நாடாக இருப்பதால், பேரிடர் மீட்புப் பணியில் அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு நேபாளத்தில் மலையேற்றப் பகுதிகளில் பல விபத்துகள் நிகழ்ந்துவிட்டன.

ஏப்ரல் மாதம் எவரஸ்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 16 ஷெர்பா வழிகாட்டிகள் இறந்தனர். இதனால், எவரஸ்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

மலையேற்றத்திற்காக பயணிகள் குவியும் காலகட்டத்தில் தற்போது, இந்த மாபெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.