இணையத்தில் சிறுமியாக நடித்தவரிடம் ஆபாசமாகப் பேசி மாட்டிக்கொண்டவருக்கு தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

பத்து வயது பிலிப்பைன்ஸ் சிறுமிபோல இணையத்தில் போலியாக நடித்து டச்சு தொண்டு நிறுவன ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் விளைவாக ஆஸ்திரேலியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக நபர் ஒருவர் நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டுள்ளார்.

பத்து வயது பிலிப்பினோ சிறுமிபோல நடித்தவரிடம், வெப்காமில் ஆபாச செய்கைகளைச் செய்தால் பணம் தருவதாக பலர் கூறியிருந்தனர்
படக்குறிப்பு, பத்து வயது பிலிப்பினோ சிறுமிபோல நடித்தவரிடம், வெப்காமில் ஆபாச செய்கைகளைச் செய்தால் பணம் தருவதாக பலர் கூறியிருந்தனர்

உலகிலேயே இப்படி நடித்து மேற்கொள்ளப்பட்ட 'ஸ்டிங் ஒபரேஷன்' விளைவாக சிறார் பாலியல் துஷ்பிரயோக குற்றம்நிரூபிக்கப்படும் முதல் நபர் இவர்தான்.

'ஸ்வீட்டி' என்ற புனைப்பெயரில் ஊழியர்கள் இணையத்தில் போலியாக நடித்தபோது, வெப்காம் முன்னால் நின்று ஆபாசமான பாலுறவுச் செய்கைகளை செய்து காட்டினால் பணம் தருகிறோம் எனக் கூறியிருந்த ஆயிரக்கணக்கான ஆட்களின் பெயர் விவரங்கள் பற்றி உலகின் பல்வேறு இடங்களிலும் பொலிசாருக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஸ்கொட் ஹன்சென் என்பவர் வெற்றிகரமாக குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால சிறைத் தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பாலுறவு குற்றவாளிகள் திருத்தத் திட்டம் ஒன்றில் இவர் பங்கேற்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.