இராணுவ பட்ஜெட்டுக்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க காங்கிரஸ் வரும் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவினத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வரக்கூடிய புதிய ஆண்டில் அமெரிக்கா 496 பில்லியன் டாலர்களை இராணுவத்துக்காக செலவிட காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுக்கு அதிபர் இனி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அமெரிக்க விமானப்படை விமானங்கள்
படக்குறிப்பு, அமெரிக்க விமானப்படை விமானங்கள்

இதில் சுமார் பாதி அளவு தொகை சம்பளச் செலவாகப் போய்விடும். இந்த ஆண்டு படையினருக்கு 1 சதவீத ஊதிய உயர்வு அளிக்கவும் காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தவிர, 64 பில்லியன் டாலர்கள் வெளிநாடுகளில் நடக்கும் போர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசின் படைகளை எதிர்த்துவரும் இராக் மற்றும் குர்தியப் படைகளுக்கு பயிற்சி உள்ளிட்ட உதவிகளை அளிக்க அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரச படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அந்தப் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா ஏற்கனவே வான் தாக்குதல்களை நடத்திவருகிறது.

பாதுகாப்புக்காக அதிகம் அளவு செலவிடும் நாடாக அமெரிக்கா பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது.

உயர் தொழில்நுட்பத்தால் இயங்கும் இராணுவ உபகரணங்களைத் தயாரிப்பதிலும் அது தொடர்ந்து முன்னணியில் உள்ளது.