கச்சா எண்ணெயின் விலையில் கடும் வீழ்ச்சி

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

எண்ணெய் விலை வீழ்ச்சி பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
படக்குறிப்பு, எண்ணெய் விலை வீழ்ச்சி பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விலைக் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, ஒரு பாரல் 59 டாலர்களுக்கு விழுந்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சியும், உற்பத்தி பெருகி வரும் வேளையில் தேவைகள் மிகவும் குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் ஜூன் மாதம் மிகவும் உச்சமாக, பாரலுக்கு 115 டாலர்களை கச்ச எண்ணெயின் விலை எட்டியது. ஒரு பாரல் எண்ணெய் என்பது சுமார் 159 லிட்டர்களுக்கு சமமாகும்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு
படக்குறிப்பு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு

கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பானது, எண்ணெய் விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில், உற்பத்தியை குறைக்கும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருந்தனர்.

கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியானது, பல பொருளாதாரங்களுக்கு ஒரு ஏற்றத்தைக் கொடுக்கும் என்றாலும், அது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை பாதித்து வருகிறது.

இப்படியே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டு போனால், எதிர்காலத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கான திட்டங்கள் பாதிக்கப்படும் என பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணக்கிட்டுள்ளது.