'ஆப்கானிய ஆடவர்கள் பெண்களை மதிப்பதில்லை': ஆய்வில் தகவல்

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானிலுள்ள ஆடவர்கள் பெண்களை மோசமாகவே நடத்துகிறார்கள் என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவதுள்ளது.

ஆப்கானிய மகளிர் அடிமைகளாக இருக்கவே ஆடவர்கள் விரும்புவதாகக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
படக்குறிப்பு, ஆப்கானிய மகளிர் அடிமைகளாக இருக்கவே ஆடவர்கள் விரும்புவதாகக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

ஆப்கானிய ஆடவர்கள் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது தொடர்பில், இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

அங்கு பெரும்பாலான ஆடவர்கள், பொதுவாழ்வு மற்றும் தனிப்பட்ட வாழ்வு ஆகிய இரண்டிலும் பெண்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் எனும் மனப்போக்கை கொண்டுள்ளனர், பெண்கள் அங்கு தொடர்ச்சியாக புறந்தள்ளப்படுகிறார்கள் போன்றவை இந்தக் கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்பை ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி அமைப்பு நடத்தியது.

இதற்காக அவர்கள் ஐந்து மாகாணங்களில் சுமார் 4000 ஆடவரிடம் கருத்துக் கேட்டனர்.

ஆப்கானிய ஆடவர்களுக்கு பெண்கள் மீது விரும்பத்தகாத மனப்போக்கும், சில சமயங்களில் கடும்போக்கான பார்வையும் உள்ளன என்று இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவித் திட்டங்கள், குறுகிய கால அடிப்படையில் இருந்தன என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் விமர்சித்துள்ளனர்.

பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் நீண்டகால அடிப்படையில் அங்கு கட்டமைப்பில் மாறுதல்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்திய ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.