போக்கோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க கூட்டு நடவடிக்கை
போக்கோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தரை வழித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் சாட் நாட்டின் துருப்புக்கள் நைஜீரியாவுக்கு நுழைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், AFP
கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான வான் தாக்குதல்களை சாட் நடத்தி வந்தது. இதனிடையே கேமரூன் நாட்டுடனான எல்லைப் பகுதி நகரான கம்பாரூவில் சாட் நாட்டுத் துருப்புக்கள், நைஜீரியப் படைகளுடன் இனைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று நைஜீரிய தேசியப் பாதுகாப்புத்துறையின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு சாட் நாட்டுத் துருப்புக்களை கண்டதாக உள்ளூர்வாசிகளும் கூறுகிறார்கள்.
போக்கோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க சாட் ஏரியை ஒட்டிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிராந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
சாட் ஏரியை ஒட்டி நான்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ளன.




























