ஆஸி.: காட்டுத் தீ சேதங்களுக்காக இழப்பீடு வழங்கும் மின்நிறுவனம்

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து தப்பிய நூற்றுக் கணக்கானவர்களுக்கு அந்நாட்டின் மிகப்பெரிய மின்சக்தி நிறுவனம் 20 கோடி டாலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் மேரிஸ்வில் பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீயினால் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டனர்.

மேரிஸ்வில் பகுதியில் 2009-ம் ஆண்டு பெப்ரவரி 7-ம் திகதி இந்தக் காட்டுத் தீயினால் 40 பேர் கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் கறுப்பு சனிக்கிழமை என்று இந்த நாள் கருதப்படுகின்றது.

இந்தக் காட்டுத் தீ பரவுவதற்கு தான் காரணமல்ல என்றே ஆஸ்நெட் (AusNet) நிறுவனம் கூறுகின்றது.

ஆனால், மின்கம்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கே காட்டுத் தீ ஏற்படக் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் மூன்றாவது தடவையாக ஆஸ்நெட் இழப்பீடு வழங்கியுள்ளது.

இம்முறை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும்.