எகிப்து மோதல்களையடுத்து கால்பந்தாட்டப் போட்டிகள் ரத்து
எகிப்தின் தலைநகர் கைரோவின் விளையாட்டரங்கத்தில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதையடுத்து மொத்த கால்பந்தாட்ட லீக் ஆட்டங்களையும் எகிப்திய அதிகாரிகள் நிறுத்திவைத்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
ஞாயிறு மாலை நடைபெற்ற ஸமாலெக் கால்பந்தாட்ட சங்கத்துக்கு எதிரான இஎன்பிபிஐ கழகத்தின் ஆட்டத்தை பார்க்கச் சென்ற ஸமாலெக் கால்பந்தாட்ட கழகத்தின் ஆதரவாளர்கள் விளையாட்டரங்கத்திற்கு நுழைய முயற்சித்த போதே மோதல்கள் வெடித்தன.
விளையாட்டரங்கத்திற்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த இவர்களை தடுத்து நிறுத்த போலீசார் கண்ணீர் குண்டுகளை பயன்படுத்தினர். அந்த அரங்கத்தின் ஒரே ஒரு வாயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த ஸமாலெக் கால்பந்தாட்ட கழகத்தின் ஆதரவாளர்களின் குழுவான ‘வைட் நைட்ஸ்’இன் தலைவர்கள் மீது கைது பிடியாணை பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் தொடர்பான விசாரணை ஒன்றுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். வன்முறை நடந்திருந்தாலும் நேற்று அந்த ஆட்டம் நடைபெற்றது.
கடந்த 2012ஆம் ஆண்டில் போர்ட் சேய்ட் பகுதியில் இதே லீக் போட்டிகளின் போது ஏறட்ட மோதல்களில் 74 கொல்லப்பட்டனர். அந்த ஆண்டின் லீக் ஆட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டன. அதனையடுத்து விளையாட்டரங்கத்தின் அனுமதி தொடர்பில் அரசாங்கம் விதித்திருந்த தடைகள் சில வாரங்களுக்கு முன்னர் தான் விலக்கப்பட்டது என்பது குறிப்பிட்தக்கது.




























