பாகிஸ்தானில் சீன முதலீட்டுத் திட்டங்களை ஜி ஜின்பிங் தொடங்கிவைக்கிறார்

பட மூலாதாரம், Reuters
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவை பலப்படுத்தும் நோக்கிலான, இரண்டு நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.
தமது நாட்பட்ட எரிசக்தி நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வந்து, பிராந்தியத்தில் தம்மை பொருளாதார மையமாக மாற்றும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கும், சுமார் ஐம்பது பில்லியன் டொலர் பெறுமதியான சீன முதலீட்டுத் திட்டத்தை, சீன அதிபர் ஜி தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டத்தின் மையமான அம்சமாக, சீனாவின் மேற்குப் பகுதி நகரான கஷ்கர் நகரிலிருந்து, பாகிஸ்தானின் துறைமுக நகரான, குவாதர் வரை, சுமார் 3,000 ( மூவாயிரம்) கிலோ மீட்டர் நீளமான வீதிகள், இரயில் பாதைகள், மற்றும் எரிசக்தி குழாய் இணைப்புகள் என்பன அடங்கும்.
சீனா தமது பொருளாதார செல்வாக்கினை, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அதிகரிப்பதை நோக்காக கொண்டுள்ளதாக, செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

























