மரபணு மாற்றியமைக்கப்பட்ட கரு:சீனாவில் சாதனை

பிரசுரிக்கப்பட்டது

மரபணு மாற்றியமைக்கப்பட்ட கருவை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள் முதல் கட்டத்தை அடைந்துள்ளனர்.

மரபணு மாற்று சிகிச்சையில் மேலும் ஒரு முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது
படக்குறிப்பு, மரபணு மாற்று சிகிச்சையில் மேலும் ஒரு முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது

ஆனால் இப்படியான பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச விஞ்ஞானிகள் கோரியுள்ளனர்.

உலகில் முதலாவதான சோதனை முயற்சி என்று நம்பப்படும் ஒரு முன்னெடுப்பில், குவான்ஷோ பல்கலைகழகத்திலுள்ள விஞ்ஞானிகள் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயிரழப்பை ஏற்படுத்தும் தலசேமியா நோயுடன் தொடர்புடைய மரபணுவை கருவிலிருந்து பிரித்தெடுத்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமான மரபணுவை 86 மனிதக் கருக்களில் வைத்துள்ளனர்.

இந்த வகையிலான தொழில்நுட்பம் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ள இந்த வழிமுறையை முன்னணி அறிவியல் பத்திரிகையான சயின்ஸ் அண்ட் நேச்சர், தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையில் நிராகரித்துள்ளது.

இம்முறையானது எதிர்காலத்தில் வடிவமைக்கப்பட்ட குழந்தைகளை உற்பத்தி செய்யவதற்கான முதல்படியாக அமைந்துவிடும் என்று கூறி, உலகின் பல பகுதிகளிலுள்ள விஞ்ஞானிகளும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

செயற்கைக் கருவூட்டல் மையத்திலிருந்து பெறப்பட்ட கருக்களிலேயே இந்த மரபணு மாறுதல்கள் செய்யப்பட்டன.

எனினும் அந்தக் கருக்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து, குழந்தையாக பிறப்பதற்கு சாத்தியமில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.