புருண்டி: 3-வது தவணைக்கும் போட்டியிடும் அதிபரைக் கண்டித்து போராட்டம்

'அதிபர் மூன்றாவது தவணைக்கும் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது': எதிர்க்கட்சி
படக்குறிப்பு, 'அதிபர் மூன்றாவது தவணைக்கும் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது': எதிர்க்கட்சி
பிரசுரிக்கப்பட்டது

புருண்டி தலைநகர் புஜும்புராவில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்துள்ளன.

அரசாங்கம் அரசியலமைப்புக்கு எதிரான சதிப்புரட்சியை அரங்கேற்றுவதாக குற்றம்சாட்டி எதிர்ப்பாளர்கள் அங்கு போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி, டயர்களை எரித்தனர். பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.

புருண்டி அதிபர் பியர் குருன்சிஸா மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறைகள் வெடித்துள்ளன.

இந்த அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறுகின்ற எதிர்க்கட்சியினர், பல ஆண்டுகளாக நீடித்த இனப்பிரச்சனைக்கு முடிவுகண்ட அமைதி ஒப்பந்தத்தை பாதிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை என்று அரசாங்கம் கூறுகின்றது.

ஜுன் மாதம் நடக்கவுள்ள தேர்தலை ஒட்டி வன்முறைகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புருண்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.