சவுதி அரசில் பெரும் மாற்றங்கள்

பிரசுரிக்கப்பட்டது

சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துலசிஸ் அவர்கள், முடிக்குரிய வாரிசுகளின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அமைச்சரவையிலும் மாற்றத்தை செய்துள்ளார்.

சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துலசிஸ்
படக்குறிப்பு, சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துலசிஸ்

மறைந்த மன்னர் அப்துல்லாவின் கூட்டாளிகள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளதாக தென்படுகின்றது.

முடிக்குரிய வாரிசுகளின் வரிசையில் முதலாவதாக இருந்த தனது ஒன்றுவிட்ட சகோதரர் முக்ரின் அவர்களை முடிக்குரிய இளவரசர் பதவியில் இருந்து அவர் நீக்கியிருக்கிறார்.

அதற்கு பதிலாக தனது மருமகனான சக்திமிக்க உள்துறை அமைச்சர் முஹம்மது பின் நயவ் அவர்களை நியமித்துள்ளார்.

தனது மகனான முஹம்மது பின் சல்மானை முடிக்குரிய துணை இளவரசராக அவர் நியமித்துள்ளார்.

உலகில் மிக அதிக காலம் வெளியுறவு அமைச்சராக, 1975 முதல் பணியாற்றிய இளவரசர் சவுத் அல் பைசலின் இராஜினாமாவையும் அவர் ஏற்றுள்ளார்.

அவரது பதவி வாசிங்டனுக்கான சவுதியின் தூதராக இருந்த அப்தல் அல் ஜுபைருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.

இந்த நியமனங்கள் சவுதியின் பிராந்திய போட்டி நாடானா இரானுக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கையை வலியுறுத்தும் வகையிலானவை என்று வாசிங்டனுக்கான பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.