தாய்லாந்து கல்லறை விவகாரம்: நான்கு பேர் கைது

பிரசுரிக்கப்பட்டது

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான கல்லறைகள் தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த மூன்று பேரும் மியான்மரைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிணைக் கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் பசியால் இறந்தவுடன் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
படக்குறிப்பு, பிணைக் கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் பசியால் இறந்தவுடன் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்லறையில் 26 உடல்கள் இருந்தன. மலேசிய எல்லைக்கு அருகில் இருந்த ஒரு கைவிடப்பட்ட காட்டுப் பகுதி முகாமில் இந்தக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பர்மாவில் அச்சுறுத்துலுக்குப் பயந்து வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாதையில் அந்த முகாம் இருந்தது.

பர்மாவிலிருந்து புலம்பெயர முன்றவர்கள், இந்த முகாம்களில் பிடித்துவைக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் பிணைத் தொகைக் கேட்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இரண்டு கிராம அதிகாரிகள், அந்த முகாம் அமைந்திருக்கும் சோங்க்லா மாகாண கவுன்சில் உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேரை திங்கட்கிழமையன்று கைதுசெய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆட்கடத்தல் தொழில் குறித்து அதிகாரிகளுக்கும் உள்ளூர் காவல்துறையினருக்கும் நன்றாகவே தெரியும் என மனித உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வந்தன.

பர்மாவைச் சேர்ந்த சோ நைங் என்பவர்தான் இந்த ஆட்கடத்தல் கும்பலின் மையப்புள்ளி என்றும் இந்த முகாம்களை நடத்தி, பிணைத் தொகை கேட்டது அவர்தான் என்றும் தாய்லாந்து நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் நான்கு பேரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த முகாமில் இறந்தவர்களில் பெரும்பலானவர்கள், நோய் காரணமாகவோ உணவில்லாமலோதான் இறந்துள்ளனர். அந்தப் பகுதியில் இம்மாதிரியான சில பெரிய கல்லறைகள் இருக்கலாம் என அந்த முகாமில் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள், தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்திச்செல்லப்படுகின்றனர்.

பர்மாவில் நிலவும் பிரிவினைவாத வன்முறையிலிருந்து தப்புவதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தப் பாதையைத்தான் பயன்படுத்திவந்தனர்.

பர்மாவில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் 2012ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து வெளியேறினர். அப்போதிருந்தே, முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது கலவரங்கள் நடந்துவருகின்றன.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்கும்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ.நா. பர்மா அரசை வலியுறுத்தியது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நாடற்றவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.