பூகம்பத்துக்குப் பின் நில அதிர்வுகள் எத்தனை முறை ஏற்படும்?

பூகம்பத்துக்குப் பின் நில அதிர்வு.... நேபாள பூகம்பத்துக்கு பின் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வில் பீஹாரில் 17 பேர் இறந்தனர்
படக்குறிப்பு, பூகம்பத்துக்குப் பின் நில அதிர்வு.... நேபாள பூகம்பத்துக்கு பின் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வில் பீஹாரில் 17 பேர் இறந்தனர்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்ப அழிவில் 8,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டு, மேலும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இயற்கை பேரழிவுகள் இது போல ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்வதில்லை, ஆனால் பூகம்பங்கள் ஒரு விதிவிலக்கு. பெரும் நில நடுக்கங்கள் ஏற்படும்போது அவைகளைப் பின் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் பொதுவாக ஏற்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 7.3 அளவு கொண்டது ஆனால் அது ஏப்ரல் 25ம் தேதி தாக்கிய முதல் பூகம்பம் போல 7.8 அளவு கொண்டதல்ல. இருந்தாலும் இதுவும் ஒரு பெரிய பூகம்பம்தான்.

உலகில் பூகம்பம் ஏற்படக்கூடிய தன்மை கொண்ட பகுதிகளில் பூகம்பங்கள் ஏற்படும்போது, அதன் பின்னர் நில அதிர்வுகள் அல்லது மேலும் சில பூகம்பங்கள் அதே நிலப்பிளவுக் கோடுப் பகுதிக்கருகே நடப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

இமயமலைப் பகுதி இது போன்ற ஒரு பகுதிதான்.

சிலியில் 2014ல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து ஏற்பட்ட பின் நில அதிர்வுகளில் ஒன்று 7.7 அளவு கொண்டது . இதனால் பயந்து போன பலர் மண் மேடுகளில் காலத்தைக் கழித்தனர்
படக்குறிப்பு, சிலியில் 2014ல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து ஏற்பட்ட பின் நில அதிர்வுகளில் ஒன்று 7.7 அளவு கொண்டது . இதனால் பயந்து போன பலர் மண் மேடுகளில் காலத்தைக் கழித்தனர்

பூமிக்கடியில் இருக்கும் நிலப்பரப்புத் தகடுகளின் எல்லைகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகவும் சகஜமானதுதான். நேபாளம், இது போல, இந்தியா மற்றும் யுரேஷியா நிலத்தகடுகள் மோதும் ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது.

இந்திய நிலத்தகடு, யுரேஷிய நிலத்தகடுடன் மோதியபோதுதான், இமயமலைச் சாரல் பகுதி உருவானது. அதே சமயத்தில் அது பெரும் சக்தியையும் உருவாக்கி பூமியின் மேல் விளிம்புக்கு கொண்டுவந்து அங்கு நிலத் தகடுகள் பிளவுபட்டு மேலும் அவை நகர வழிவகுத்தது.

பல காலம் எந்த வித இயக்கமும் இல்லாமல் இருந்த இரண்டு நிலத்தகடுகள் அல்லது நிலப் பிளவுகள் ஒன்றிணையும்போது, அப்போது விளைவதுதான் பெரும் பூகம்பம். ஏனென்றால் இந்த மாதிரி திடீர் இணைப்புகள் சிறைப்பட்டுக் கிடந்த பெரும் சக்தியை வெளிக் கொண்டுவருகின்றன.

நிலத் தகடுகளின் இயங்கியல் தன்மை என்னவெனில், ஒரு நில நடுக்கம் ஒரு பகுதியில் அழுத்தத்தை வெளிக்கொண்டுவரும் அதே நேரத்தில், அது மற்றொரு புள்ளியில் அழுத்தத்தை அதிகரிக்கும். இது புதிய பூகம்பம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கும்.

ஹைட்டியில் 2010ல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து ஏற்பட்ட பின் அதிர்வு முதல் பூகம்பத்தில் சிக்கிய எவரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கையைத் தகர்த்தது
படக்குறிப்பு, ஹைட்டியில் 2010ல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து ஏற்பட்ட பின் அதிர்வு முதல் பூகம்பத்தில் சிக்கிய எவரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கையைத் தகர்த்தது

இந்தப் பின்னணியில்தான், நேபாளத்தின் இரண்டாவது பூகம்பம், முதல் பூகம்பம் உருவாக்கிய அழுத்த மாற்றங்களால் தூண்டப்பட்டது என்று கருதப்படுகிறது.அமெரிக்க நிலப்பரப்பியல் கழகம் இந்தப் பொதுப்பகுதியில் இது போன்ற ஒரு பின் அதிர்வு ஏற்படும் என்று முன்னரே கணித்திருந்தது.

இமயமலைப்பகுதியில் இன்னும் நிலத்தடி தகடுகளின் செயல்பாடு செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு இன்னும் தணியவில்லை.

செவ்வாய்க்கிழமை நடந்த பின் அதிர்வுக்குப் பின்னர் மேலும் 17 கடுமையான பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க நிலப்பரப்பியல் கழகம் கூறுகிறது.

பூகம்பங்கள் மற்றும் பின் அதிர்வுகள் எப்போது , எங்கு ஏற்படும் என்பதை எளிதில் கணிக்கமுடியாது என்றே வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு பெரிய பூகம்பம் நடந்த பின்னர், பின் அதிர்வுகள் நடக்கக் கூடிய சாத்தியக்கூறை எதிர்பார்ப்பதை இவர்கள் நிராகரிக்கவில்லை.

எனவே பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகே வாழும் மக்களை மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிப்பது அவசியம்.