வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு மரண தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ்யோன் யோங் - சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தென்கொரியாவின் உளவு நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிபர் கிம் ஜோங் - இல்லுக்கு விசுவாசமாக இல்லாததால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

தற்போது கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஹ்யோன் யோங் - சோல் ஏப்ரல் 16ஆம் தேதி ரஷ்யாவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டபோது எடுத்த படம்.
படக்குறிப்பு, தற்போது கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஹ்யோன் யோங் - சோல் ஏப்ரல் 16ஆம் தேதி ரஷ்யாவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

கடந்த ஏப்ரல் முப்பதாம் தேதி, விமான எதிர்ப்புத் துப்பாக்கியின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு முன்பாக ஹ்யோன் கொல்லப்பட்டதாக தென் கொரிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜோங் - யுன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஹ்யோன் தூங்கிவிட்டதால் அதிபர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

வட கொரியாவில் அதிகாரிகளை மாற்றுவது என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். ஆனால், அதிபருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவர் கொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அந்நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்துவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் தேதிக்கு முந்தைய தினம் அவர் தொலைக்காட்சியில் தோன்றியதாக என்கே நியூஸ் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டிலிருந்தே ஹ்யோன் ஜெனரலாக இருந்துவந்தாலும் அவரைப் பற்றி அதிகத் தகவல்கள் தெரியவரவில்லை. முந்தைய அதிபர் 2011 டிசம்பரில் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கை நடத்துவதற்கான குழுவில் ஹ்யோன் இடம்பெற்றிருந்தார். அவரது செல்வாக்கு அதிகரித்துவருவதை இது காட்டியது.

கடந்த ஆண்டு ஹ்யோன், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தொடரும் அழித்தொழிப்பு

அதிபராக கிம் பதவியேற்றதிலிருந்தே பலர் அழித்தொழிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
படக்குறிப்பு, அதிபராக கிம் பதவியேற்றதிலிருந்தே பலர் அழித்தொழிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

வட கொரியாவின் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே, கிம் பல அதிகாரிகளை அழித்தொழிப்பதில் ஈடுபட்டார்.

ஒரு காலத்தில் அந்நாட்டின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக இருந்த, சாங் ஸோங் - தாயக் இப்படித்தான் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் அவர் அதிபரின் நெருங்கிய உறவினரும்கூட.

2013ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சிக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது சாங் ஸோங் கைதுசெய்யப்பட்டார். துரோகமிழைத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த மாதம், மனித உரிமைக் குழுக்கள் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு படத்தை வெளியிட்டன. அந்தப் படத்தில் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கங்கோன் ராணுவப் பயிற்சி முகாமில் உள்ள ஒரு சிறிய பகுதி படம்பிடிக்கப்பட்டிருந்தது. அதில், வழக்கத்திற்கு மாறாக சில சம்பவங்கள் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்தப் படத்தில், பல ஆயுதங்கள் ஒரு சிறிய பகுதியை குறிவைத்திருந்தன. தவிர, பார்வையாளர் பகுதி, பல பயணிகள் பேருந்து ஆகியவையும் அந்தப் படத்தில் இருந்தன. இந்தப் படத்தின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

பொதுமக்களின் முன்னிலையில், விமான எதிர்ப்புத் துப்பாக்கியால் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றபடுவதையே அந்த படம் காண்பிக்கிறது என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்தன.