தீவிரவாதத்துடன் தொடர்பிருந்தால் இரட்டைக் குடியுரிமை ரத்து: ஆஸியில் புதிய சட்டம்
ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், சிரியா மற்றும் இராக்கில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து போரிட்டால் அவர்களது குடியுரிமையை ரத்து செய்யும் சட்டம் ஒன்று அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
எந்தக் குற்றச்சாட்டிலும் ஒருவர் தண்டிக்கப்படாவிட்டாலும், அந்த நபர் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என சந்தேகம் எழுந்தாலும், புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்புடன் இணைந்து சுமார் நூறு ஆஸ்திரேலியர்கள் போரிட்டு வருகிறார்கள் என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.
அவர்களில் பாதியளவினர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் சட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக பிரிட்டனிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் புதிய சட்டம் வடிவமைக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.




























