டென்னிஸ் தரப்பட்டியலில் ரஃபேல் நடால் வீழ்ச்சி

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் ஆடவர் டென்னிஸ் தரப்பட்டியலில் முன்னர் முதலிடத்திலும் பின்னர் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடால் கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக அந்தத் தரப்பட்டியலின் 10ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரஃபேல் நடாலின் டென்னிஸ் வாழ்க்கை இறங்குமுகத்தில் உள்ளது
படக்குறிப்பு, ரஃபேல் நடாலின் டென்னிஸ் வாழ்க்கை இறங்குமுகத்தில் உள்ளது

கடந்த வாரம் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சிடம் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய பின்னர் நடாலின் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு அவர் பதின்ம வயதில் இருந்த போது உலகத் தரப்பட்டியலின் 11ஆவது இடத்தில் இருந்தார். அதன் பின்னர் டென்னிஸ் வாழ்க்கையில் அவருக்கு ஏறுமுகமாகவே இருந்தது.

தொடர்ச்சியாக பலப் பட்டங்களை வென்று வந்த அவர் ஒரு கட்டத்தில் பல மாதங்கள் முதலிடத்தில் இருந்தார்.

ரஃபேல் நடால் 9 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று ' களிமண்ணின் மன்னர்' என்று அழைக்கப்படுகிறார்
படக்குறிப்பு, ரஃபேல் நடால் 9 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று ' களிமண்ணின் மன்னர்' என்று அழைக்கப்படுகிறார்

எனினும் கடந்த ஆண்டு தொடக்கம் உடல்நலக் குறைவு காரணமாக அவர் குறைவான போட்டிகளிலியே பங்கேற்றார். வெற்றியும் கணிசமாகக் குறைந்தது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ரோலன் காரோ மைதானத்தில் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா நோவாக் யாக்கோவிச்சை வென்று பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஆடவர் தரப்பட்டியலின் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் பட்டத்தைப் பெற யாக்கோவிச் தவறினாலும் தரப்பட்டியலின் முதலிடத்தை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இரண்டாவது இடத்தில் ரோஜர் ஃபெடரரும் மூன்றாவது இடத்தில் ஆண்டி மர்ரியும் உள்ளனர்.

செரீனா: அசைக்க முடியாத ஆளுமை
படக்குறிப்பு, செரீனா: அசைக்க முடியாத ஆளுமை

மகளிர் பிரிவில் தொடர்ந்து செரினா வில்லியம்ஸின் ஆளுமையே இருந்து வருகிறது.

பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை பெற்றதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் அவர் 20 ஆவது கிராண்ட்ஸாம் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் செக் குடியரசின் பெட்ரா க்விட்டோவா உள்ளார்.

எனினும் ஓரிரு வெற்றிகள் மூலம் தரப்பட்டியலில் வீரர்கள் மேலோ அல்லது கீழோ செல்ல முடியும்.