பிள்ளைகளின் பயணச்செலவை திரும்ப அளித்தார் பிரெஞ்சுப் பிரதமர்

பட மூலாதாரம், AFP
பிரெஞ்சு பிரதமர் மேனுவல் வால் கடந்த சனிக்கிழமை பெர்லினில் நடந்த சேம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு அரசு விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துச் சென்றதற்கான செலவை தான் திரும்பச் செலுத்திவிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த குறிப்பிட்ட கால்பந்தாட்டப் போட்டியில் பார்சிலோனா அணியும் யுவண்டிஸ் அணியும் மோதின. அதைக்காண்பதற்கு அரசு விமானத்தில் சென்ற பிரெஞ்சு பிரதமர் மேனுவல் வால், தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் சென்றார். அது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின்(UEFA) தலைவர் மிஷேல் ப்ளாடினியின் அழைப்பின்பேரிலேயே தாம் இந்த போட்டிகளுக்குச் சென்றதாகவும் இது தமது அதிகாரப்பூர்வமான பயணம் என்றும் மேனுவல் வால் வலியுறுத்துகிறார்.
அடுத்த ஆண்டு பிரான்ஸ் நடத்தவிருக்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகள் குறித்து பேசுவதற்காகவே தாம் அங்கு சென்றதால் தமது இந்த பயணம் அதிகாரப்பூர்வப் பயணம் என்பது அவரது வாதம்.
அதேசமயம், இந்தப் பயணம் குறித்து பிரான்ஸ் மக்களின் விமர்சனங்களையும் உணர்வுகளையும் தாம் மதிப்பதாக தெரிவித்திருக்கும் மேனுவல் வால், தம்முடன் இந்த விமானப் பயணத்தில் வந்த தமது இரு பிள்ளைகளின் பயணச்செலவை தாம் திரும்ப அளிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
மேனுவல் வாலின் இரு பிள்ளைகளின் பயணச் செலவு 2800 டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.




























