கடும் பஞ்சத்தை எதிர்நோக்குகிறது வட கொரியா

பிரசுரிக்கப்பட்டது

நூறாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பஞ்சத்தைச் சந்திப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதனால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நடவுசெய்யப்பட்ட பயிர்களில் மூன்றில் ஒரு பகுதி காய்ந்து போயிருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, நடவுசெய்யப்பட்ட பயிர்களில் மூன்றில் ஒரு பகுதி காய்ந்து போயிருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

நெல் விவசாயம் செய்யும் பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து வருவதாகவும் அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1990களில் எற்பட்ட பெரும் பஞ்சத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், சமீப காலத்தில் விவசாயத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாக, இந்த முறை ஏற்பட்டிருக்கும் பஞ்சம், அவ்வளவு மோசமாக இருக்காது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருவதாகவும், தற்போது அந்நாட்டில் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் சத்துக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் தற்போது 4,41,560 ஹெக்டேரில் நாற்று நடும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால், அவற்றில் 1, 36,200 ஹெக்டேரில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான மழைதான் கடந்த ஆண்டு அந்நாட்டில் பெய்தது.