கரென்சி நோட்டுகளில் பாலினச் சமத்துவம் இருக்கிறதா?
அமெரிக்க நிதி அமைச்சகம் புதிதாக வடிவமைக்கப்படும் பத்து டாலர் நோட்டில் பெண் ஒருவரை இடம்பெறச் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த நோட்டில் இடம்பெறப்போகும் பெண் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை.
2020ல் இந்த புதிய டாலர் நோட்டு வெளியாகவிருக்கிறது. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த 19வது அரசியல் சாஸன சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு நூறுஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த நோட்டு வெளியாகிறது.
ஆனால், அமெரிக்காவிற்கு முன்பாகவே பல நாடுகளின் நோட்டுகளில் பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். தங்கள் நாட்டு நோட்டுகளில் அதிக அளவில் பெண்களை இடம்பெறச் செய்திருக்கும் நாடுகளைப் பார்க்கலாம்.
ஸ்வீடன்

பட மூலாதாரம், Other
ஸ்வீடனின் மூன்று நோட்டுகளில் பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் ஒரு பெண் உருவம், ஸ்வீடனின் அன்னை எனப்படும் கற்பனை உருவம். 2015லும் 2016லும் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய நோட்டுகளில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் இடம்பெறவிருக்கின்றனர். நடிகையான க்ரேடா கார்போ, எழுத்தாளர் ஆஸ்ட்ரிட் லிண்ட்க்ரென், பாடகி பிர்கிட் நில்ஸோன் ஆகியோர்தான் அந்த மூன்று பெண்கள்.
ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Other
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அதன் நோட்டுகளில் ஆண்களும் பெண்களும் சம அளவில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒரு பக்கத்தில் பெண்ணும் மற்றொரு பக்கத்தில் ஆணும் இடம்பெற்றிருப்பார்கள். ஒரே ஒரு நோட்டில் மட்டும் ஒரு பக்கத்தில் அரசி எலிசபெத்தின் படமும் மற்றொரு பக்கத்தில் அதன் பாராளுமன்றக் கட்டடமும் இடம்பெற்றிருக்கும்.
நார்வே

பட மூலாதாரம், Other
நார்வேயில் புழக்கத்தில் உள்ள ஐந்து நோட்டுகளஇல் இரண்டில் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், விரைவில் அந்நாடு அறிமுகப்படுத்தவிருக்கும் நோட்டில், மனிதர்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கடல் சார்ந்த படங்கள் இடம்பெறவிருக்கிறது.
டென்மார்க்

பட மூலாதாரம், Other
டென்மார்க் சமீபத்தில் புதிய வரிசை நோட்டுகளை வெளியிட்டது. அந்த நோட்டுகளில் மனிதர்களுக்குப் பதிலாக, பாலங்கள், வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதற்கு முந்தைய ஐந்து நோட்டுகளில் இரண்டில் ஆண்களும் இரண்டில் பெண்களும் இடம்பெற்றிருந்தனர். ஒன்றில், ஒரு பக்கத்தில் ஆணும் மற்றொரு பக்கத்தில் பெண்ணும் இடம்பெற்றிருந்தனர்.
செக் குடியரசு

பட மூலாதாரம், Other
செக் குடியரசின் மூன்று நோட்டுகளில் இரண்டில் பெண்களின் படம் இருக்கிறது. அந்த இரண்டு பேரில் ஒருவர் எழுத்தாளர் போஸெனா நெம்கோவா. மற்றொருவர் பாடகி எம்மி டிஸ்டின். முன்பு, மத்திய கால இளவரசியான ஏக்னெஸின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை.
டொமினிக்கன் குடியரசு
டொமினிகன் குடியரசின் இரண்டு நோட்டுகளில் நான்கு பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். 200 பெஸோ மதிப்பிலான நோட்டில் மிராபால் சகோதரிகள் மூன்று பேரின் படம் இடம்பெற்றிருக்கும். இவர்கள் ரஃபேல் ட்ருஜில்லோ என்பவரது ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்கள். 500 பெஸோ நோட்டில், கவிஞர் சலோம் யுரேனா என்பவர் அவரது கணவர் ஹென்றிக் யுரேனாவுடன் இடம்பெற்றிருந்தார்.
ஃபிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம், Other
1980களில் ஃபிலிப்பைன்ஸ் 500 பெஸோ நோட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் செனட்டரான பெனிக்னோ அகினோ என்பவரது படம் இடம்பெற்றிருந்தது. அவர் கொலைசெய்யப்பட்ட பிறகு, அவரது மனைவி கோராஸோன் அகினோ அதிபராகப் பதவியேற்றார். ஆசியாவிலேயே முதன் முதலாக அதிபரானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவர் 2009ல் இறந்த பிறகு, அவரது படமும் நோட்டில் இடம்பெற்றது. மற்றொரு நோட்டில், ஜோஸெபா லானெஸ் எஸ்கோடா என்ற பெண்ணின் படம் மேலும் இரண்டு ஆண்களுடன் சேர்ந்து இடம்பெற்றுள்ளது.
பெண்களை கூடுதலாக நோட்டுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவில் மட்டுமல்லாது கனடாவிலும் வலுத்துவருகிறது.
அந்நாட்டு நோட்டு ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரே பெண்ணான தெரெசே காஸ்க்ரென் என்பவரது படம் 2011ல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு கப்பலின் படம் இடம்பெற்றது. இதையடுத்து, நோட்டுகளில் பெண்களின் படங்களை இடம்பெறச் செய்ய வேண்டுமென ஆயிரக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டு மனு ஒன்றை அனுப்பினர்.
பிரிட்டனின் 5 பவுண்டு நோட்டில் இடம்பெற்றிருக்கும் சமூக சீர்திருத்தவாதியும் கொடையாளியுமான எலிசபெத் ஃப்ரையின் படத்திற்குப் பதிலாக வின்ஸ்டன் சர்ச்சிலின் படத்தை பதிப்பிக்கப்போவதாக 2013ல் அறிவிப்பு வெளியானது. அப்போதும் இதேபோல ஆயிரக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தனர்.
2017ஆம் ஆண்டிலிருந்து 10 பவுண்டு நோட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் படம் இடம்பெறுமென இங்கிலாந்து வங்கி அறிவித்திருக்கிறது.
பிரிட்டனிலும் கனடாவிலும் பெரும்பாலான நோட்டுகளில் எலிசபெத் அரசியின் படம் இடம்பெற்றுருக்கிறது. ஆனால், அவர் அரசி என்ற முறையில் இடம்பெறுகிறார் என்பதால் அதனை கணக்கில் கொள்ள முடியாது என்பவர்களும் இருக்கிறார்கள். தவிர, அவருக்குப் பின், ஆண் வாரிசு இந்த நோட்டுகளில் இடம்பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
































