சாதகமான தீர்வுக்காக பணியாற்றுவதாக கிரீஸ் பிரதமர் கூறுகிறார்

பட மூலாதாரம், EPA
கிரேக்கத்தின் கடன் நெருக்கடிக்கு சாதகமான தீர்வொன்றைக் காண்பதை உறுதிசெய்வதற்காகவும் தமது நாடு யூரோ வலயத்திலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதற்காகவும் பணியாற்றிவருவதாக அந்நாட்டின் பிரதமர் கூறுகின்றார்.
அபாயமான விளைவுகள் ஏற்படும் என்று நம்பியிருப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
திங்களன்று நடக்கவுள்ள ஐரோப்பியத் தலைவர்களின் மாநாட்டில் தீர்வுகிடைக்கவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரேக்க வங்கிகளுக்கான கடன்கள் தொடர்பில் ஐரோப்பிய மத்திய வங்கி அவசரக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பிரதமரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
ஐரோப்பிய மத்திய வங்கி கிரேக்க வங்கிகளுக்கான கடன்களில் இரண்டு பில்லியன் யூரோவுக்கும் அதிக தொகையை இந்த வாரத்தில் மீளப்பெற்றுக்கொண்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை கிரேக்கம் இந்த மாதத்தின் இறுதிக்குள் செலுத்தியாக வேண்டும்.
அல்லது கடன்செலுத்தத் தவறிய குற்றத்துக்கு நாடு தள்ளப்பட்டு, யூரோவை பயன்படுத்தும் நாடுகளின் வலயத்திலிருந்து வெளியேறும் நிலையும் ஏற்படலாம்.




























