கிரேக்கத்தின் கடன் நெருக்கடி; 'உடன்பாடுகள் எட்டப்படலாம்'

பட மூலாதாரம், Getty
கிரேக்கத்தின் கடன் நெருக்கடியை கையாள்வது தொடர்பான இன்றைய அவசர மாநாட்டில் உடன்பாடுகள் ஏற்படலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று ஞாயிறன்று கிரீஸ் அரசு முன்வைத்த யோசனைகள் தொடர்பில் யூரோவலய தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார விவகார ஆணையர் கூறியுள்ளார்.
கிரேக்கத்தின் யோசனைகளை முன்னேற்றத்துக்கான சிறந்த அடித்தளம் என்று மற்றபல அதிகாரிகள் வர்ணித்துள்ளனர்.
ஏதென்ஸ் பங்குச்சந்தையின் ஆரம்ப விற்பனை நிலவரம் 7 வீத அதிகரிப்பைக் காட்டியுள்ளது. மற்ற ஐரோப்பிய பங்குச் சுட்டெண்களும் சாதகமான போக்கைக் காண்பித்துள்ளன.
அடுத்த சில மணித்தியாலங்களில் நடக்கும் தொடர் கூட்டங்களில் கிரேக்கத்தின் கடன்நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் பற்றி ஆராயப்படவுள்ளன.
செலவினக் குறைப்புகள், வரி அதிகரிப்புகள், வரவுசெலவுத் திட்ட இலக்குகளுக்கான வாக்குறுதிகள் என பல்வேறு விடயங்கள் குறித்து இந்தக் கூட்டங்களில் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு கிரேக்கம் செலுத்த வேண்டிய 1.6 பில்லியன் யூரோ கடன்தொகையை இந்த மாதக் கடைசிக்குள் செலுத்தியாக வேண்டும்.
இல்லாவிட்டால் யூரோவைப் பயன்படுத்தும் நாடுகளின் வலயத்திலிருந்து கிரேக்கம் வெளியேற நேரிடும்.
































