அறுபதாயிரம் குடியேறிகளை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பட மூலாதாரம், AFP
பலமணிநேரப் பேச்சுவார்த்தைக்குப்பிறகு 60,000 குடியேறிகளை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத்தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வந்து, கிரேக்கத்திலும் இத்தாலியிலும் தற்போது தங்கியிருப்பவர்களில் நாற்பதாயிரம் பேரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக ஏற்றுக் குடியமர்த்த இந்த உடன்பாடு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்தபடி அகதித்தஞ்சம் கோரியுள்ளவர்களில் 20,00 பேரை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் குடியேற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒட்டுமொத்த குடியேற்ற நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாமாக விரும்பிச் செய்யும் ஒன்றாக இருக்கும் என்றும், எந்த நாடும் குடியேறிகளை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படாது என்றும் இந்த உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், ஹங்கேரி உள்ளிட்ட பல நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் இன்னமும் கூட விரிவானதாக இருந்திருக்கலாம் என்று இத்தாலிய பிரதமர் மத்தியோ ரென்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.




























