"அல்கைதா இந்திய துணைக்கண்டத் தலைவர்" வங்கதேசத்தில் கைது

பட மூலாதாரம், AP
தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் 12 பேரை கைது செய்துள்ளதாக வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தாவின் உள்ளூர் தலைவரும் அடங்குவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வங்கதேசத்தில் மத தீவிரவாதத்தை விமர்சித்த வலைப்பூ பதிவாளர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்த குழுவினர் ஏற்கனவே பொறுப்பேற்றிருந்தனர்.
தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் பதுங்கிருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, வெடிப்பொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அல்-கொய்தா அமைப்பு வெளியிட்ட காணொளி ஒன்றில், இந்தியத் துணைக்கண்டத்தில் தங்களது கிளையை நிறுவப்போவதாக அறிவித்திருந்தது.
அத்தோடு ஜிகாதி நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்க தாங்கள் விரும்புவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.




























