ஏமன்: வெளியேற்றப்பட்ட அமைச்சர்கள் நாடு திரும்பினர்
ஏமன் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஹௌதி கிளர்ச்சிக்காரர்களால் வெளியேற்றப்பட்ட அமைச்சர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty
அந்நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ஏடன் நகருக்கு வெளியில் அமைந்துள்ள ராணுவ முகாமிற்கு அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் மூத்த புலனாய்வுத் துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அந்நாட்டில் மீண்டும் அரசு என்ற அமைப்பு ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே அவர்கள் அங்கு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர், உளவுத் துறைத் தலைவர், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் உள்ளிட்டவர்கள் ஏடன் வந்திருந்த அரச குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த மூன்று நாட்களாக, சவூதியின் வான் தாக்குதல் உதவியுடன் தென் பகுதியைச் சேர்ந்த போராளிகள், கலகப் படையினரை ஏடனின் பெரும் பகுதியைவிட்டு துரத்திவிட்டனர்.
புதன்கிழமையன்று, முவல்லா என்ற அருகிலுள்ள மாவட்டத்தையும் மீளக் கைப்பற்றியுள்ளனர்.
ஏடன் நகரில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, ஹௌதிகளுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பதினைந்து வாரங்களில் தரையில் நடந்த தாக்குதல்களிலும் வான் தாக்குதல்களிலும் 3200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் இவர்களில் பாதிப் பேர் பொதுமக்கள் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மோதலின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். ஏமனில் இருக்கும் இரண்டரைக் கோடிப் போரில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையிலான உதவியை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
































