கிரேக்கத்தில் வங்கிகள் மீண்டும் திறந்தன

பிரசுரிக்கப்பட்டது

கிரேக்கத்தில் மூன்று வாரங்களில் முதல்முறையாக வங்கிகள் திறந்துள்ளன.

வங்கிகள் திறந்தாலும், கட்டுப்பாடுகள் தொடருகின்றன
படக்குறிப்பு, வங்கிகள் திறந்தாலும், கட்டுப்பாடுகள் தொடருகின்றன

இதையடுத்து தலைநகர் ஏதன்ஸின் மத்தியப் பகுதியில், நுகர்வோர் நீண்ட வரிசைகளில் நின்று தமது காசோலைகளை செலுத்தவும், கட்டணங்களைச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்குமான கட்டுப்பாடுகள் தொடருகின்றன.

தற்போதைய சூழலில் வாரமொன்றுக்கு ஒருவர் 420யூரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

கடன் சுமையில் சிக்கியுள்ள கிரேக்கத்தை அதிலிருந்து மீட்கும் நோக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கடந்த வாரம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், வங்கிகள் அங்கு மீண்டும் திறந்துள்ளன.

புதிய கடன்மீட்புத் திட்டத்தின்படி அங்கு போக்குவரத்து மற்றும் உணவகங்கள் உட்பட பல சேவைகளுக்கான வரியும், பொருட்கள் மீதான விற்பனை வரியும் அதிகரிக்கின்றன.

எனினும் கிரேக்க வங்கிச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில காலமாகலாம் என ஏதன்ஸிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.