'சிசில் சிங்கம்' கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில்

பிரசுரிக்கப்பட்டது

ஜிம்பாப்வேயின் பெருமை மிகுந்த சிங்கமாக அறியப்பட்ட சிசில் கொலை தொடர்பில் இருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பபட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கொல்லப்பட்ட சிங்கமும் அதைக் கொன்ற பல் மருத்துவரும்
படக்குறிப்பு, கொல்லப்பட்ட சிங்கமும் அதைக் கொன்ற பல் மருத்துவரும்

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவரால் அந்தச் சிங்கம் கொல்லப்பட்டது தொடர்பில், சட்டவிரோதமாக வேட்டைக்கு உதவினர் எனும் குற்றச்சாட்டில் அந்த இருவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

சிசில் என்றழைக்கப்பட்ட அந்தச் சிங்கம் ஹவாங்கே தேசிய வனவிலங்கு சரணாலயத்துக்கு வெளியே பல்மருத்துவரும், வேட்டைப் பிரியருமான வால்டர் பால்மர் எனும் அமெரிக்கரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

அவரும் வழக்கை எதிர்கொள்ள நேரலாம். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் கருங்கரடி ஒன்றை கொன்றார் என தேசிய குற்ற ஆவணங்களில் அவர் பெயர் உள்ளது என அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

சிசிலின் கருப்பு பிடறி மிகவும் பிரபலம்
படக்குறிப்பு, சிசிலின் கருப்பு பிடறி மிகவும் பிரபலம்

அந்தச் சிங்கத்தைக் கொன்றதற்காக தான் வருந்துவதாகவும், அது சட்டத்துக்கு உட்பட்ட வேட்டை என்று தான் கருதியதாகவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்திலுள்ள பால்மரின் பல்மருத்துவமனைக்கு முன்பாக போராட்டங்களும், துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளன.