எம் எச் 370 தேடுதல் நடவடிக்கையில் மொரீஷியஸும் ஈடுபடுகிறது
கடந்த ஆண்டு காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370ன் பகுதிகளை இந்தியப் பெருங்கடலில் தேட, தம்மாலான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என மொரீஷியஸ் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் நாட்டின் கடலோரக் காவல்படையின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று மொரீஷியஸின் துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
கடலில் ஏதாவது நொறுங்கி விழுந்த சிதிலங்கள் காணப்பட்டால் அதுகுறித்து காவல்துறையினரிடம் தெரியப்படுத்துமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
காணமல் போன மலேசிய விமானத்தின் இறக்கைப் பகுதியுடையது என்று கருதப்படும் ஒரு பாகம் அருகிலிருக்கும் ரெயூன்யோ தீவுப் பகுதியில் அண்மையில் கரையொதிங்கியது.
அந்தப் பகுதி மேலதிக பரிசோதனைகளுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விசாரணைகளை ஒருங்கிணைப்பது குறித்து மலேசிய வல்லுநர்கள் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திவருகின்றனர்.




























