எதிர்ப்புகளை மீறி ஷஃப்கத் ஹுசெய்ன் மரண தண்டனையை நிறைவேற்றியது பாகிஸ்தான்

பட மூலாதாரம், AFP
மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்புகளையும் மீறி, 2004ஆம் ஆண்டில் ஒரு ஏழு வயது சிறுவனை கொலைச் செய்தது தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர்.
இதுவரை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட ஷஃப்கத் ஹுசெய்னின் தூக்குத் தண்டனை இன்று செவ்வாயன்று காலை விடிவதற்கு சற்று முன்பு கராச்சியில் இருக்கும் சிறையில் நிறைவேற்றப்பட்டது.
ஷஃப்கத் ஹுசெய்னின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டப்போது அவருக்கு வயது வெறும் பதினான்கு மட்டுமே என்று வாதிட்டிருந்த அவரது வழக்கறிஞர்கள், சித்திரவதையின் மூலமே ஷஃப்கத் ஹுசெய்னிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டபோது அவர் சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய வயதை எட்டியிருந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty
கடைசி முறையாக அவர் தனது குடும்பத்தைச் சந்திக்க நேற்று திங்களன்று அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் நிறுத்திவைத்திருந்தது.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தாலிபான் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய நூற்றைம்பது பேர் கொல்லப்பட்டதையடுத்து மரண தண்டனைகளை நிறைவேற்றுவதைப் பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.




























