"ஆஸ்திரேலியாவின் புவி வெப்ப வாயுக் குறைப்பு இலக்கு போதுமானதல்ல"
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை குறைக்க, ஆஸ்திரேலியப் பிரதமர் நிர்ணயித்திருக்கும் இலக்கு, போதுமானதல்ல என அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AP
எந்த அளவுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டுமோ, அதில் பாதியையே இலக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் அறிவித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, 2030ஆம் ஆண்டுவாக்கில் 26 சதவீதம் அளவுக்கு தனது புவி வெப்ப வாயுக்களை குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக டோனி அப்பாட் கூறியிருந்தார்.
இதற்கு மேலும் குறைத்தால், அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அரசின் வாதத்தை விஞ்ஞானிகள் விமர்சித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த வருடப் பிற்பகுதியில் பாரிஸில் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெற உள்ள நிலையில், புவி வெப்ப வாயுக் குறைப்புக்கான இலக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும் என கூறியுள்ளன.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூடுதலான அளவில் புவி வெப்ப வாயுக்களைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.




























