அமெரிக்காவின் 'ரேஞ்சர்ஸ்' படைக்கு தேர்ச்சி பெறும் முதல் பெண்கள்

அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான ‘ரேஞ்சர்ஸ்’ படைப்பிரிவுக்கு தேர்ச்சி பெற்றுள்ள முதல்பெண்கள் என்ற பெருமையை இரண்டு அமெரிக்கப் பெண்கள் பெறவுள்ளனர்.
இதுவரை ஆண்கள் மட்டுமே இந்தப் படைப்பிரிவுக்கு தேர்ச்சி பெற்றுவந்திருந்தனர்.
கடுமையான பயிற்சிகளும் போட்டிகளும் அடங்கிய இந்தத் தேர்வில் கேப்டன் கிறிஸ்டன் க்ரீஸ்ட் மற்றும் ஃபர்ஸ்ட் லெப்டினென்ட் ஷேய் ஹேவர் ஆகிய இரண்டு பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சியில் ஈடுபடுவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் நான்கு நாட்களிலேயே தோல்வி அடைந்துவிடுவது வழக்கம்.
அமெரிக்காவின் ரேஞ்சர் படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்றுவதற்கு பெண்களுக்கு இன்னும் தடை உள்ளது.
எனினும், கிட்டத்தட்ட எல்லா அமெரிக்க படைப் பிரிவுகளிலும் பெண்கள் சேர்ந்துகொள்வதை அனுமதிக்கும் திட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























