தாய்லாந்தில் 2 டன் யானைத் தந்தங்கள் அழிப்பு
தாய்லாந்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 2 டன்னுக்கும் அதிகமான எடையுடைய யானைத் தந்தங்கள் எரித்து, அழிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Reuters
இந்த நிகழ்வு அந்நாட்டின் பிரதம மந்திரி பிரயூத் சானோசா முன்னிலையில் நடைபெற்றது.
சட்டவிரோதமாக நடக்கும் இந்த யானைத் தந்த வர்த்தகத்தை ஒழிப்பதில் தாய்லாந்து எத்தகைய உறுதியுடன் உள்ளது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று என பிரதமர் தெரிவித்தார்.
விலங்குகள் உரிமைகளின் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வெகுவாக வரவேற்றுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களை அழிக்காமல் இருந்தால், ஊழல் அதிகாரிகளின் துணையுடன், அவை கறுப்புச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என அவர்கள் கூறிவந்தனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தப்படும் இந்த யானைத் தந்தங்கள், சீனா, வியட்னாம், லாவோஸ் ஆகிய நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தாய்லாந்தின் வழியாகவே சென்றடைகின்றது.




























