தாய்லாந்து குண்டு வெடிப்பு: "சந்தேக நபர் கைரேகை மற்றதுடன் ஒத்துப்போகிறது"
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடந்த மாதம் ஒரு ஆலயத்தில் நடைபெற்ற இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் கைரேகைகள், அந்த குண்டைத் தயாரிக்கும் பொருட்களில் இருந்தவையுடன் ஒத்துப் போகின்றன என்று தாய்லாந்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், epa
சந்தேகத்துக்குரிய அந்த வெளிநாட்டு நபர், செவ்வாய்க்கிழமை தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டார்.
இருபது பேர் கொல்லப்பட்ட அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்திய வலயமைப்பில், இந்த நபருக்கு முக்கியப் பங்கு இருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர்.
முதுகில் சுமந்து செல்லும் பை ஒன்றை, அந்த ஆலையத்தில் விட்டுச்சென்ற நபர் குறித்து கண்காணிப்பு கேமரா படங்களில் காணப்படும் நபரின் உருவ அமைப்பு, இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் உருவ அமைப்புக்கும் ஒற்றுமை உள்ளது போலத் தெரிகிறது எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தாய் அதிகாரிகளின் இந்த அறிவிப்பானது, இந்தத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களாக முஸ்லிம் உய்கர்களே உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது என பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
தாய்லாந்திலிருந்து பெரும் தொகையான உய்கர்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கு இடையே மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாக இது மாறியுள்ளது எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.




























