ஆமைகள் உலகின் "உசைன் போல்ட்"

பிரசுரிக்கப்பட்டது

பெர்டி என்ற ஆமை வேகமாகச் செல்வதில் புதிய உலக சாதனையைப் படைத்து, ஆமை உலகின் உசைன் போல்ட்டாக உருவெடுத்துள்ளது.

புதிய சாதனை படைத்திருக்கும் பெர்டி ஆமை, தன்னை அனைவரும் கவனிப்பதை விரும்பக்கூடியது என்கிறார் அதன் உரிமையாளர்.
படக்குறிப்பு, புதிய சாதனை படைத்திருக்கும் பெர்டி ஆமை, தன்னை அனைவரும் கவனிப்பதை விரும்பக்கூடியது என்கிறார் அதன் உரிமையாளர்.

துர்ஹாம் கவுன்டியில் உள்ள அட்வன்சர் வேலியைச் சேர்ந்த பெர்டி ஆமை, 18 அடி தூரத்தை 19.59 வினாடிகளில் கடந்துள்ளது.

1977ல் இதே தூரத்தை வேறொரு ஆமை 43.7 வினாடிகளில் கடந்திருந்த்தே இதற்கு முந்தைய சாதனையாக இருந்துவந்தது.

ஜுலை மாதமே பெர்டி இந்த சாதனையை நிகழ்த்திவிட்டாலும், தற்போதுதான் அந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு முறை இதேபோல டிவி கேமராக்களுக்கு முன்பாக ஓடும்படி பெர்டியைத் தூண்ட முடியும் என்கிறார் அதன் உரிமையாளரான ஜெனைன் கால்ஸினி.

தான் ஓடுவதை எல்லோரும் வந்து பார்ப்பதை இந்த ஆமை விரும்புவதாக ஜெனைன் கூறுகிறார்.

சுமார் 10 வயதாகும் பெர்டி ஆமை தன் தோழி ஷெல்லியுடன் வசித்துவருகிறது.

பொதுவாக இந்த வகை ஆமைகள் 80 முதல் 100 வருடங்கள் வரை வாழும்.

இதற்கு முந்தைய உலக சாதனை, தெற்கு யார்க்ஷயரில் உள்ள டிக்ஹில்லில் 1977 ஜூலை 2ஆம் தேதி நடந்த தேசிய ஆமைப் போட்டியில் நிகழ்த்தப்பட்டது.