ஜெர்மனியில் குடியேறிகளை நிர்வகிக்க 4000 படைச் சிப்பாய்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனிக்குள் இந்த வார-இறுதி நாட்களில் வந்துகுவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சுமார் 40 ஆயிரம் அகதிகளை நிர்வகிப்பதற்காக நாலாயிரம் பேர் வரையான படைச் சிப்பாய்கள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருமளவிலான குடியேறிகள் இராணுவ முகாம்களுக்குள்ளேயே தங்க வைக்கப்படவுள்ளனர்.
இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான அகதி-ஆதரவாளர்கள் பல ஐரோப்பிய நகரங்களில் பேரணியாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பெருமளவில் குடியேறிகள் வந்துகுவிவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணிகளும் நடக்கவுள்ளன.
இதனிடையே, சிரியாவின் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்துவருகின்ற மக்களுக்கு உதவுவதற்காக அதன் அண்டை நாடுகளுக்கு 3 பில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று ஹங்கேரியின் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த உதவி மூலம், ஐரோப்பாவுக்குள் பெருமளவில் குடியேறிகள் குடிபெயர்வதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயிரக் கணக்கான மக்கள் ஹங்கேரி ஊடாக வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவை நோக்கி பயணித்துவருகின்றனர்.




























