முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொலிஸ் விசாரணை

பட மூலாதாரம், AFP
இலங்கையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொலிசார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் சொந்த ஊரான மெதமுலனவில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் கட்டப்பட்டபோது, நடந்துள்ள 90 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்னரும் வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ இங்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
சட்டவிரோதமான முறையில் நிதிசேகரித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

























