நிலநடுக்கத்தால் வீடிழந்த பாக், ஆப்கான் மக்கள் குளிரால் கடும் பாதிப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்கள், இறக்கும் அபாயத்தில் இருக்கின்றனர் என்று நிவாரணப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP Getty Images
பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் நிலவும் அதிக குளிர் காரணமாக, குறிப்பாக குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்தில் இருக்கின்றனர்.
பூகம்பம் ஏற்பட்டு இரண்டாவது நாளாக, வெட்ட வெளியில் இருப்பவர்களுக்கு கூடாரங்கள் மற்றும் போர்வைகள் அவசரமாகத் தேவைப்படுதாக பாகிஸ்தானிய தகவல்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.
பூகம்பம் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால், வீடுகளுக்குள் செல்ல தயங்கிய ஆயிரக்கணக்கான மக்கள், உறைபனி காலநிலையிலும் செவ்வாய்க்கிழமை இரவை வெட்ட வெளியில் கழித்துள்ளனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பூகம்பத்தால் , இரு நாடுகளிலும் குறைந்தது 360 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகிறது.
ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், அதிலும் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தோரின் எண்ணிகை உயரலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர மற்றும் மலைப் பகுதிகள், கடும் மழை மற்றும் பனிப் பொழிவினால் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி, ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில் இருந்ததாகவும், அங்கு அரிதாகக் காணப்படும் சாலைகளை பூகம்பம் சேதத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் சித்ரால் நகருக்கு அருகில் நில பூகம்பத்திற்கான மையப்புள்ளி அமைந்துள்ளது.
ஆனால் இந்த பூகம்பத்தால் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவாரிலுள்ள கட்டங்களும் அதிர்ந்தன.
பூகம்பத்தின் காரணமாக தமது 1600க்கும் அதிகமானர்கள் காயமடைந்துள்ளதாகவும், நான்காயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன எனவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் பூகம்பாத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்திலுள்ள பகுதியொன்றை, தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கில், தஜிகிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள, தர்காட் என்ற மாவட்டமே, இரவில் நடந்த மோதலையடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது.
இப்பகுதியில் தொடரந்தும் மோதல் நடைபெற்றுவருவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
































