"கடந்த கால் நூற்றாண்டில் 2015ல்தான் அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றம்"
கடந்த கால் நூற்றாண்டில் 2015ஆம் ஆண்டில்தான் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஆம்னெஸ்டி தெரிவிக்கிறது.

கடந்த 27 ஆண்டுகளில், 2015இல் தான் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.
`கடந்த ஆண்டில் குறைந்தது 1,634 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது' என தெரிவிக்கும் அம்னெஸ்டி அமைப்பு, இது 2014ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளில் 89 சதவீதமானவை இரான், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சீனா கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பட மூலாதாரம், AFP
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கும் அம்னெஸ்டி கடந்த ஆண்டில் சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறைவதாகத் தெரிகிறது; ஆனாலும் சீனாவில் அவை இரகசியமாக மேற்கொள்ளப்படுவதால் அவ்வாறான மரணங்களை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாமல் உள்ளது எனவும் ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AP
கடந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மற்றொருபுறம், கடந்த ஆண்டில் உலக நாடுகள் பலவற்றில் மரணதண்டனை முதல்முறையாக முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
ஃபீஜி, மடகஸ்கார், காங்கோ, சுரிநாம் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு தமது சட்டங்களை மாற்றிக் கொண்டுள்ளன. இது தொடர்பான சட்டம் மொங்கோலியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































